ஆவேசிக்க ஆடிக் குறிசொல்லுதலும் போல்வனவற்றால் அவனை மெய்யாகக் காட்டல். அடி-254: வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் - பயன் களை விரும்புபவர்கள் விரும்பிய பயன்களை விரும்பியபடியே பெற்றமையால் (சென்று நேர்ச்சிக் கடன் செலுத்துவாராய்) அடி-251: ஆடு களம் சிலம்ப வெறியாடுகளம் ஒலிக்க. பாடி - அவ்வொலிக்கு இயையத் தாமும் பல பாட்டுக்களைப் பாடி. அடி-251, 252: கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றை ஒரு சேர வாய் வைத்து ஊதி. (‘ஊதி’ என்பது சொல்லெச்சம்.) கொடு மணி இயக்கி - பேரோசையை உடைய மணியை அடித்து. அடி-253, 254: ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வழிபட - பின்னிடாத வலியினையுடைய, ‘பிணிமுகம்’ என்னும் பெயரினதாகிய யானை ஊர்தியை, ‘அது வாழ்வதாக’ என்று வாழ்த்தி (அவ்விடத்தும் அவன் உறைதலும் உரியன் வழிபாடு செய்ய.) (மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்1 எனப் புறத்திலும் முருகனுக்கு மயிற்கொடியும், ‘பிணிமுகம்’ என்னும் யானை ஊர்தியும் சொல்லப்பட்டன. இனி, ‘பிணிமுகமாகவது மயில்’ என்றே கொள்ளலும் ஆம். மேற் கூறிய ‘சீர் கெழு விழவு’ முதலி இடங்களிலும் வேண்டுநர் வேண்டி யாங்கு எய்தினர் சென்று வழிபடுவாராயினும், பெரும் பான்மை பற்றிக் குறமகள் முருகாற்றுப்படுத்த கோயிலையே அதற்கு உரித்தாகக் கூறினார்.) அடி-255: ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே - மேற்கூறியவாறு, ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழா முதலிய பல இடங்களிலும் அவன் உறைதலை உரியனாதல் நன்கறியப் பட்ட முறைமையேயாம். (வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபடுதலை இறுதியிற் குறித்த உரு கெழு வியல் நகருக்கே உரித்தாகக் கூறினமையின், மேற் கூறிய அவை இகந்து படாமைப் பொருட்டு. “ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே” என வலியுறுத்து ஓதினார்.) அடி-256: ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - கூடற் குடவியின் குன்று முதலாக இதுகாறும் கூறி வந்த அவ்வவ் விடங்களிலே யாயினும் ஆக; (உம்மையால், ‘பிற இடங்களிலே யாயினும் ஆக’, இதனால் அவன் உறையும் இடங்களை வரை யறுத்துக் கூறுதல் இயலாமை பெறப்பட்டது.)
1. பாட்டு - 56.
|