பக்கம் எண் :

389திருமுருகாற்றுப்படை

அடி-257: கண்டுழி, முந்து முகன் காண் தக அமர்ந்து ஏத்தி - நீ சென்று கண்ட பொழுது, முதலில் உனது முகம் அவனால் நோக்கப்படத்தக்க தாகும்படி உவகையால் மலர்ந்து, ஒரு துதியைக் சொல்லிப் பின்பு.

அடி-258: கை தொழூஉ - கைகளைக் குவித்துக் கும்பிட்டு - பரவி - பல துதிகளைப் பாடி. கால் உற வணங்கி - அவனது திருவடிகளிலே உனது தலை பொருந்தும்படி நிலத்திலே வீழ்ந்து பணிந்து.

அடி-282, 283: யான் அறி அளவையின் பல ஏத்தி - நான் அறிந்த அளவு உனக்குக் கூறிய பலவற்றைச் சொல்லி (மலர் தூவி) த்துதித்து, (பலவாவன,)

அடி-262, 263: மால் வரை மாலை மகள் மகனே - மலைகளிலெல்லாம் மிகப் பெரிய மலையாகிய இமய மலைக்கு மகளான உமைக்கு மகனே! மாற்றோர் கூற்றே - அசுரராகிய பகைவர்க்குக் கூற்றுவனே!

அடி-270: மைந்தர் ஏறே - வீரருள் அரியேறு ஒப்பவனே!

அடி-275: பலர் புகழ் நல்மொழிப் புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நல்ல சொல்வன்மையை யுடைய புலவர் களில் ஆனேறு போல்பவனே! (ஆனேறு புகழும், பெருமிதமும் உடையது.)

அடி-277: அலந்தோர்க்கு அளிக்கும் சேஎய் - களைகண் காணாது அலமந்து வந்தோர்க்கு இரங்கும் சேஎய்! (அளபெடை விளிப் பொருட்டு.)

அடி-278, 277: மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்துப் பொலம் பூண் - மிகுந்த போர்களைத் தொலைத்த எப்பொழுதும் வென்றே செல்கின்ற நின் மார்பிடத்துப் பொன்னாலாகிய அணிகளையுடைய (சேஎய்.)

அடி-279: பரிசிலர்த் தாங்கும் நெடு வேஎள் - இரவலரை அவர் வேண்டுவன கொடுத்துத் துன்பம் தீர்த்துப் புரக்கின்ற நெடிய வேஎள். (இங்கும் அளபெடை விளிப்பொருட்டு.) உரு கெழு - பகைத்தவர்க்கு அச்சம் தோன்ற நிற்கின்ற (வேஎள்) என இவ்வாறு முதற்கண் சேயனாக வைத்து விளித்தும், பின்பு,

அடி-260: ஐவருள் ஒருவன் அகம்கை ஏற்ப - ஐம்பூதங் களின் தலைவர்களில் ஒருவனாகிய தீக் கடவுள் சிவபெரு மானது வீரியத்தைத் தனது அகங்கையிலே ஏற்றலால்.

அடி-261: அறுவர் - இருடியர் பத்தினியர் எழுவருள் அருந்ததி யொழிந்த ஏனை அறுவர்.