பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை390

அடி-259, 261: நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை பயந்த ஆறு அமர் செல்வ - (இமய மலையின்) நெடிய பெரிய சிகரங்கட்கு இடையே உள்ள நீல நிறத்தை உடைய, நாணற் புதர்களால் பசுமை மிக்க சுனையிடத்தே (‘சரவணப் பொய்கையில்’ என்றபடி.) பெறப்பட்ட, ஆறு உருவம் பொருந்திய செல்வ.

(முருகன் அவதாரம் பழைய புராணங்களில், ‘உமை வயிற்றில் கரு உண்டாயின் அதனால் உலகிற்குத் தீமை பல உளவாம் - என்று இந்திரன் கருதி. - அது வேண்டா - என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டமையால், அப்பெரு மானது வீரியத்தை இருடியர் எழுவரும் ஏற்று வேள்வித் தீயில் இட்டு அதனை வேள்விப் பிரசாதமாக வாங்கித் தம் மனைவியரிடம் கொடுக்க நினைக்கும் பொழுது அருந்ததி அப்பாற் சென்றமையால், அதனை ஆறு கூறு செய்து ஏனை அறுவர்க்கும் கொடுக்க, அவர்கள் அதனை விழுங்கிச் சூல் முதிர்ந்தவர்களாய்ச் சரவணப் பொய்கையில் ஈன்றமையால் ஆறு குழந்தைகளாய் முருகன் அப்பொய்கையில் தோன்றி, விளையாட்டயர்ந்து இருக்க, அதனை யறியாது இந்திரன் வந்து போர் தொடுக்க, முருகன் ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஓர் உருவினனாய் அவனை வென்று, பின்னும் அவ்வுருவத்தையே உடையனாயினான்’ எனக் கூறப்பட்டது. அதனால், இங்கும், பரிபாடலிலும்1 அவ்வாறே கூறப்பட்டது. ‘இவையெல்லாம் பொருத்தம் அற்றன’ என்று, பிற்காலத்தில், ‘முருகன் அவதாரம் வேறு வகையாகப் புராணங்களில் கூறப்பட்டது’ என்பதைக் கந்த புராணத்தால் அறிகின்றோம்.)

அடி-262: ஆல் கெழு கடவுள் புதல்வ - ஆல நிழலில் அமர்ந்திருக்கும் கடவுளுக்கு (சிவ பெருமானுக்கு) மைந்த!

அடி-264: வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ - வேந்தர்க்கு வெற்றியைத் தருபவளும், எப்பொழுதும் வெல்லும் போரையே மேற்கொள்பவளும் ஆகிய கொற்றவைக்கு (துர்க்கைக்கு) மைந்த!

அடி-265: இழை அணி சிறப்பின் பழையோள் குழவி - அணிகலங்களை அணிந்த சிறப்பினையுடைய காடுகிழாளுக்கு மைந்த (இவள் ‘மாயோள்’ எனப்படுதல் பற்றி இவளை வடமொழியாளர், ‘காளி’ என்றனர். (‘வனதுர்க்கையாவாள் இவளே’ என்னாது, நச்சினார்க்கினியர் கொற்றவையை ‘வன துர்க்கை’ என்றார்.)

அடி-266: வணங்கு வில் வானோர் தானைத் தலைவ - தேவர் பொருட்டு, வளைந்த வில்லுடன், அவர்தம் சேனைக்குத் தலைமை பூண்டவ (‘தேவ சேனாபதி’ என்றதாம்.)


1. பாடல் - 5.