பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை392

ஒரு பெயர், ‘இயக்குதலை யுடைய பொருள்’ என்பது இதன் பொருள். இதற்கு, ‘தலைவன்’ எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர்.)

அடி-281, 282: சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மத வலி போர் மிகு பொருந - சூரபன்மனது கிளையை அழித்த வலிமையாலே, எப்பொழுதும் செருக்கினால் வலிய எழும் போரில் வெற்றியால் மேம்பட்டு விளங்குகின்ற போர் வீர. குரிசில் - தலைவ. என - இவ்வாறு அணியனாக விளித்தும் (ஏத்தி) ஆனாது - அவ்வளவின் அமையாது.

அடி-285, 286: நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய் - நீ நின்னோடு ஒப்பார் இல்லாத போறிவினை யுடையாய் (ஆயின்)

அடி-284, 285: நின் அளந்தறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் - நினது பெருமையை அளவிட்டு அறிதல் பலவாகிய உயிர்கட்கு இயல் வதன்று ஆகையால் (யானும் நின்னை அளந்தறிய வாராது) நினது திருவடிக்கீழ் உறைதலையே விரும்பி வந்தேன்.

அடி-286, 287: எனக் குறித்தது மொழியா அளவையின் - என்று இவ்வாறு, நீ கருதிச் சென்ற காரியத்தை எடுத்துச் சொல்லி விண்ணப்பித்தற்கு முன்பே.

அடி- 288, 287: வேறு பல் உருவின் குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறு வேறான பலவகைப்பட்ட வடிவங்களை யுடைய, குறளாராகிய கூளிச் சுற்றத்தவர் (பூத கணங்கள்) பலர் தாமும் நீ கருதியதையே உடன் கருதி.

அடி-289: சாறு அயர் களத்து வீறு பெறத்தோன்றி - (முருகன் இருக்கும் இடம் எல்லாம் விழாக் கொண்டாடும் களமாகவே யிருக்கும் ஆதலால் அவ்வாறு) விழாக் கொண் டாடும் களத்தில் (உனக்காக முருகன் முன்பு) பெருமிதம் பெறத் தோன்றி.

அடி-291: பெரும - பெருமானே.

அடி-290: முது வாய் இரவலன் - புலமை முதிர்ந்த, வாய்மையை யுடையனாகிய இரவலன் ஒருவன்.

அடி-291: நின் வள் புகழ் நயந்து - நினது வளவிய புகழை கூறுதலையே விரும்பி.

அடி-292, 291: இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் - கேட்டார்க்கு இனிமை பயப்பனவும், உறுதி பயப்பனவும் ஆகிய அப்புகழ்களைச் சொல்லி நின்னைத் துதித்து வந்துள்ளான்.

அடி-290: தான் அளியனே - அவன் நின்னால் அருள் பண்ணத் தக்கவனே.