பக்கம் எண் :

395திருமுருகாற்றுப்படை

முதல் இன்றித் தனித்து வாடும்படி, (புதருட் சென்று) அவற்றின் வேர்களைப் பெயர்த்துவிட்டு.

அடி-305, 306: விண்பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - வானத்தைக் குத்தும் நெடுமூங்கில்களின் ஞாயிற்று வட்டத்தைப் போல ஈக்களால் தொடுத்துக் கட்டப்பட்ட. குளிர்ந்த, மணக்கின்ற விரிந்த தேன் கூடுகள் சிதையவும்.

அடி-306, 307: நல் பல ஆசினி முது சுளை கலாவ - நல்ல, பல ஈசப் பலாக்களின் முதிர்ந்த பழம் (வெடித்து உதிர்தலால் அவற்றின்) சுளைகள் வீழ்ந்து உடன் கலக்கவும்.

அடி-307, 308: மீமிசை நாக நறு மலர் உதிர - உச்சியில் உள்ள சுரபுன்னை மரங்கள் அதிர்தலால் அவற்றின் நறிய மலர்கள் உதிரவும்.

அடி-308, 309: ஊகமொடு மா முக முசுக் கலை பனிப்ப - (அங்கு உலாவுகின்ற) கருங் குரங்கின் ஆண்களோடு, கரிய முகத்தையுடைய முசுக் குரங்கின் ஆண்களும் நடுங்கவும்.

அடி-309, 310: பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி - அழகிய நெற்றியையுடைய பிடி யானை மெய் குளிரும்படி நீரை இறைத்து.

அடி-310, 311: பெருங் களிற்று வான் கோடு தழிஇ - பெரிய ஆண் யானைகளின் வெள்ளிய கொம்புகளை உள் அடக்கி. முத்து, உடை - முத்தினை உடைய (கோடு)

அடி-312, 311: நல் பொன் மணி நிறம் கிளர தத்துற்று - நல்ல பொன்னும், மணியும் தம் நிறம் கிளர்ந்து தோன்றக் குதித்துக்கொண்டு பொன் கொழியா - பொற்பொடிகளை அரித்தெடுத்து.

அடி-313, 314: வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழுக் குலை உதிர தாக்கி - மலை வாழையாகிய முழுமை யான முதல் ஒடியவும், தென்னையது இளநீர்கள் சிறந்த குலை களினின்று உதிரவும் அவ்விரண்டனையும் மோதி.

அடி-315: கறிக் கொடிக் கருந்துணர் சாய - மிளகு கொடியில் உள்ள கரிய கொத்துக்கள் மடியவும்.