பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை396

அடி-315, 316, 317: பொறிப் புற மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ கோழி வயப் பெடை இரிய - புள்ளிகளை யுடைய தோகையையும், இளமை தோன்றும் நடையையும் உடைய மயில்கள் பலவும் ஒருங்கு சேர்ந்து அஞ்சிக் கானங் கோழியின் ஓடுதல் வல்ல பெடைகளோடும் இடம் தேடி நீங்கவும். (‘பெடையோடு’) என உருபு விரிக்க.

அடி-317, 320: கேழலோடு வெளிற்றின் இரு, பனை புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் பெருங் கல் விடர் அளைச் செறிய - காட்டுப் பன்றியின் ஆண்களோடு, உள்ளே வெளிற்றை யுடைய கரிய பனைமரத்தினது புல்லிய துறும்புகளை ஒத்த, நிறம் வாய்ந்த மயிரினை உடைய உடம்பையும், வளைந்த பாதங்களையும் உடைய கரடிகளும் பெரிய கல் பிளந்துள்ள முழையில் போய் ஒளியவும்.

அடி-320, 321: கரு கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்புகளையுடைய, ஆமா இனத்து நல்ல எருதுகள் சினந்து முழங்கவும் (321, 322 - சேண் நின்ற இழிதரும் அருவி)

“சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு செல்லும் செலவ, நயந்தனையாயின், அவன் கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று, விழுச் சீரலைவாய்ச் சேறலும் உரியன்; அதாஅன்று, ஆவினன் குடி அசைதலும் உரியன்; அதாஅன்று, ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று, குன்றுதோறாடலும் நின்ற தன் பண்பு; அதாஅன்று; ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவு முதலிய இடங்களில் உறைதலும் உரியன், குறமகள் முருகாற்றுப் படுத்த நகரில் வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட உறைதலும் உரியன். இவற்றொடு அவன் ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே; ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக; பிற இடங்களிலாயினும் ஆக; நீ சென்று கண்டுழி, முந்து முகன் அமர்ந்து ஏத்தி, பின் கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி, யான் அணிந்து கூறிய அளவான பல பெயர்களால் சேயனாக விளித்தும், அணியனாக விளித்தும் மலர் தூவி ஏத்தி, முடிவில், நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின் அடி யுள்ளி வந்தனென் - என்று சொல்லி, நீ கருதிச் சென்றதை விண்ணப்பி. அவ்வாறு நீ விண்ணப்பிக்கும் முன்பே கூளியர் களத்துத் தோன்றி, - பெரும, முது வாய் இரவலன் நின் புகழ் நயந்து ஏத்தி வந்துள்ளான்; தான் அளியனே என்று கூறப் பழமுதிர் சோலை மலை கிழவோன் முதற்கண் வான் தோய் நிவப்பின் வந்து எய்தி, பின் அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன் இளநலங்காட்டி அன்புடை நன்மொழி அளைஇ, முந்நீர் வளைஇய உலகத்து விளிவின்று நீ ஒருவனே யாகித் தோன்றும்படி பெறவரும் பரிசில் நல்கும்”

என இங்ஙனம், முருகன்பால் சென்று வணங்கித் திருவருள் பெற்றான் ஒரு புலவன் அது பெற விரும்பிச் செல்லும் மற்றொரு புலவனை எதிர்ப்பட்டு அவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தியவாறாக இயைத்து முடிக்க.

இத்தனி வெண்பாக்கள் பிற்காலத்தவரால் செய்து சேர்க்கப்பட்டவை.

இவற்றின் பொருள் வெளிப்படை.

திருமுருகாற்றுப்படை முற்றிற்று