| எழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத் தன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து எய்து துணித்திடும் துணித்த விடக்கினை விறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி | 40. | நறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு அண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத் தண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால் மஞ்சன மாக முகந்து மலரெனக் குஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை | 45. | கடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக் கடுங்குரல் நாய்பின் தொடர யாவரும் வெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில் திருக்கா ளத்தி எய்திய சிவற்கு வழிபடக் கடவ மறையோன் முன்னம் | 50. | துகிலிடைச் சுற்றித் தூநீர் ஆட்டி |
அடி-32 - 41: இப்பகுதி கண்ணப்பர் வேட்டையாடி ஊண் அமுது அமைத்தலைக் கூறியது. கட்டு அழல் - வலுவான தீ. கனற் கதிர் - ஞாயிறு. சுட்டு - சுடுதலால். ‘உச்சியில் நின்று சுடுதலால்’ என்க. சுறுக்கொள்ளுதல் - சுறுக்கெனக் கால்கள் வெம்மை கொள்ளுதல். சுரம் - பாலை நிலம். நிரந்தரம் - எப்பொழுதும். பயில் - நிறைந்த. வளாகம் - ஓர் இடம். எதிர் இனம் கடவிய - எதிர்ப்படுகின்ற விலங்கினத்தை நாள்தோறும் வெருட்டிப் பழகிய. எழுப்பிய - நாயைக் குரைப்பித்தும், தாம் அதட்டியும் அவை உள்ள இடத்தினின்றும் வெளிப்பட்டு ஓடும்படி எழுப்பிய. விருகம் - மிருகம். மறுக்கு உற - வருத்தம் எய்தும்படி. ‘மறுகு’ என்னும் முதனிலை ‘மறுக்கு’ எனத் திரிந்து பெயராயிற்று. இஃது அம்முப் பெற்று, மறுக்கம்’ என வரும். இரித்திட - துரத்திட. வடிக் கணை - கூராக வடித்தலைப் பெற்ற அம்பு. துணித்திடும் - துண்டாக்க வெட்டுவான். நறுவிய - நன்றஆகத் திருத்திய. ‘சுவை கண்டு, நல்லது தெரிந்து அது வேறு அமைத்து’ என ஒருசொல் வருவித்து இயைக்க. நல்லது, சாதியொருமை. ‘நல்லது வேறு அமைத்து’ என்றதனால், ‘நல்லது அல்லாததைத் தனக்கு வைத்தான்’ என்பது பெறப்பட்டது. அடி-42, 43, 44: இப்பகுதி கண்ணப்பர் வழிபாட்டிற்கு ஆவனவற்றை அமைத்துக்கொண்ட வாற்றைக் கூறியது. “வாய்க் குடம்” என்றது, ‘வாய்தானே பயனால் குடமாயிற்று’ என்றபடி. இஃது உருவகம் அன்று. குஞ்சி - தலைமயிர். துவர்க் குலை - சிவந்த தளிர்க்
|