| நல்லன விரைமலர் நறும்புகை விளக்(கு)அவி சொல்லின பரிசிற் கருங்கலன் பூவும் பட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்(து) அருச்சனை செய்தாங்(கு) அவனடி இறைஞ்சித் | 55. | திருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி |
கொத்து “மலர் என” என்றதனால், இலையே கொண்டு சென்றமை பெறப்படும். ‘சிலை(45) ஏந்தி” என்க. அடி-45, 46: விழியையும், குரலையும் உடைய நாய்’ என்க. கரு - பெரிய. அடி-46, 47, 48: ‘தொடரக் கடும் பகலில் திருக்காளத்தி எய்தி என்க. “காளத்தி” என்றது அங்குள்ள மலையையும். “அச்சிவன்” என்றது, அம்மலையில் உள்ள சிவலிங்கத்தையும் மாம். ‘எய்திய சிவன்’ என்பது பாடம் அன்று. அடி-48 - 57: இப்பகுதி அருச்சகர் பூசை செய்த முறை களைக் கூறியது. ‘மறையோன் சிவற்கு ஆட்டி, அருங்கலன், அலங்கரித்து, செய்து, இறைஞ்சி, காட்டி, வந்து, விடை கொண்டு ஏகினபின்’ என்க. வழிபடக் கடவ மறையோன் - வழிபாட்டினைக் கடமையாகக் கொண்ட அந்தணன்; அருச்சகன். இவர் பெயர் ‘சிவகோசரியார்’ என்பதாகப் பெரிய புராணத்தில் அறிகின்றோம். அதற்கு மேற்கோள் அடுத்துவரும் திருமறம். துகிலை - வத்திரத்தை. இடை சுற்றியது - நீரை வடித்தெடுத்தற்பொருட்டு. ‘சுற்றி’ என்பது பாடம் அன்று. ‘மலர், புகை, விளக்கு, அவி இவைகள் ஆகமங்களில் சொல்லிய முறையிற் சிறிது தருங்கலனாய்’ என்க. அவி - நிவேதனம். பொருள்களது சுருக்கம்அவற்றைப் படைப்பான்மேல் ஏற்றப் பட்டது. பரிசு - தன்மை. பூ -விடுபூக்கள். பட்ட மாலை - நெற்றியில் விளங்கச் சாத்தும் இண்டை. தூக்கம் - தொங்க விடும் மாலை. ‘ஆகியவற்றால் அலங்கரித்து’ என ஒரு சொல் வருவிக்க. “முத்திரை காட்டி” என்றதனால், செய்யப் பட்ட வழி பாடு ஆகம முறை வழிபாடாதல் குறிக்கப்பட்டது. ஆகவே, “மந்திரம்” என்றதும் ஆகம மந்திரங்களேயாயின. இவற்றால் ‘அருச்சகர் ஆதிசைவர்’ என்பதும், அவரை, ‘மறையோர்’ என்றல் வழக்கு என்பதும் கொள்ளக் கிடந்தன. ‘வலமாகவும், இடமாகவும்’ என ஆக்கம் விரிக்க. வலமாக வருதல் போகத்தையும், இடமாக வருதல் மோட்சத்தையும் தருவன ஆதல் பற்றி, இரண்டையும் செய்தான் என்க. “விடைகொண்டு எகின பின்” என்றதனால். பெருமானிடம் அருச்சகர் வழிபாடு முடித்து இல்லம் செல்லும் பொழுது விடை பெறுதலும் மரபாயிற்று. விடையை, ‘உத்தரவு’ என்பர். “விடை கொண்டு”1 எனச் சேக்கிழாரும் கூறினார்.
1. பெரிய புராணம் - கண்ணப்பர் - 140.
|