| மந்திரம் எண்ணி வலம்இடம் வந்து விடைகொண்(டு) ஏகின பின்தொழில் பூசனை தன்னைப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் | 60. | இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத் தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போனகம் படைத்துப் பிரானைக் கண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் | 65. | அன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா அன்பொடு கானகம் அடையும்; அடைந்த அற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும் உதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி ஆத ரிக்கும் அந்தணன் வந்து | 70. | சீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர் |
அடி-57, 66: புக்கு - புகுந்து. இதனை மேல் “பின்” (57) என்றதன் பின்னர்க் கூட்டுக. இதனால், மேல், “எய்தி” (48) என்றது, - அருச்சகர் போயின பின் எய்தி என்றதாம் என விளக்கியவாறு. தொழிற் பூசனை - நாள்தோறும் நடைபெறக் கடவதாக அமைக்கப்பட்ட வழிபாடு. ‘வழிபாடு’ என்பது இங்கு அதனால் தோன்றிக் காணப்பட்ட பொருள்களைக் குறித்தது. தொடு - தொட்ட; அணிந்த. அடி - அடிப்புறம். “துவர்ப் பூ” என்றதற்கு, மேல், (39) “துவர்க் குலை” என்றது பார்க்க. ‘இறைச்சியின் போனகம் பெரிதும் படைத்து’ என இயைக்க. “பெரிதும்” என்றது, ‘வேண்டுமளவும்’ என்றபடி. “பிரானைக் கண்டு” ‘தரிசித்து’ என்றபடி. “கண்டு கண்டு” என்னும் அடுக்கு. ஆராமையால் நெடு நேரம் தரிசித்தமையைக் குறித்தது. கொண்டது - தான் அறிந்தது. அன்பு மீதூரப் பெற்றவழிக் கூத்துத் தானே நிகழும் ஆதலின், “தலையாரக்கும் பிட்டுக் கூத்தும் ஆடி”1 என்றாற்போலக் கூறக் கேட்டி லாராயினும் ஆடினார் என்க. ஆரா அன்பு - நிரம்பாத (தமது செயல்களை ‘இவ்வளவு போதும்’ என்று நினையாத) அன்பு. “இறைஞ்சிக் கானகம் அடையும்” என்றதனால். ‘இராப் பொழுதில் காட்டில் ஓரிடத்தில் இருப்பார்’ என்றதாயிற்று. எனவே, ‘இங்ஙனம் சில நாள்கள் சென்றன’ என்பது போதருள சேக்கிழார், ‘இரவெல்லாம் இறைவற்குக் காவல் புரிந்தார்’ - என்றார். அதுவும் அடுத்துவரும் திருமறத்தில் குறிப்பால் பெறப்படுகின்றது.
1. திருமுறை - 6.31.3.
|