பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை404

பொற்புடைப் பூசனை காணான் முடிமிசை
ஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்
இவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று
கரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப்
75.பரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று

வந்தவன் செய்து போயின வண்ணம்
சிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு
மற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ
உற்றது கேட்டருள் உன்தனக் கழகா

80.நாடொறும் நான்செய் பூசனை தன்னை

ஈங்கொரு வேடுவன்
நாயொடும் புகுந்து மிதித் துழக்கித்
தொடுசெருப் படியால் நீக்கி வாயில்
இடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை

85.தங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை

நின்திருக் கோயிலில் இட்டுப் போமது
என்றும் உன்தனக் கினிதே எனையுருக்
காணில் கொன்றிடும் யாவ ராலும்
விலங்குறுங் குணத்தன் அல்லன் என்உன்

90.திருக்குறிப்(பு) என்றவன் சென்ற அல்லிடைக்

அடி-69: ஆதரிக்கும் அந்தணன் - அன்பு செய்யும் அந்தணன்; ‘அவ் அந்தணன்’ எனச் சுட்டு வருவித்துரைக்க. ‘இனி அவ்வந்தணன் செய்தன ஆவன’ என எடுத்துக்கொண்டு உரைத்தல் கருத்து என்க.

அடி-66 - 90: அடைந்த அற்றை - தாம் (அருச்சகர்) திரும்பித் தம் இடத்தை அடைந்த அந்த நாளை, (இரவுப் பொழுதை). “அயல்” என்றது, அந்தக் காட்டில் அவர் கொண்டிருந்த தவச் சாலையை. “தணிந்த மனத் திருமுனிவர் தபோவனத்திடைச் சார்ந்தார்1 என்ற சேக்கிழார் திருமொழியைக் காண்க. உதித்த போழ்தத்துள் உதயமான அந்த நேரத்திற்கு முன்பே, பொற்பு - அழகு. அஃதாவது முறை தவறாது செய்யப்பட்டது. இங்கும் “பூசனை” என்றது அது நிகழ்ந்தமையை உணர்த்தும் அடையாளங்களை. துவர் - தளிர்களை. ‘சாத்தினவன் அன்பினால்தான் செய்திருக்க வேண்டும்’ என்னும் கருத்தால் அவற்றை உடனே எடுத்தெறிய வில்லை. மறித்தும் - நாம்


1. பெரிய புராணம் - கண்ணப்பர் - 140.