பக்கம் எண் :

411திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

கல்லாடதேவ நாயனார்
அருளிச் செய்த

19. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

499.பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்,
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்,
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்,
5தோல்நெடும்பையில் குறுமயிர் திணித்து

வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன்,
உழுவைக் கூருகிர்க் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன்,
நீலப்பீலி நெற்றி சூழ்ந்த
10கானக் குஞ்சிக் கவடி புல்லினன்,

499. 'திருமறம்' என்பது பற்றி முன்னைப் பாட்டின் உரையில் கூறப்பட்டது.

அடி-1: பரிவு - அன்பு. பரிவின் தன்மை - பரிவாகிய பண்பு. இன், வேண்டாவழிச் சாரியை, இவ்அடியையே பற்றிச் சேக்கிழார் "அன்பு பிழம்பாய்த் திரிவார்" எனவும், "அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பு" எனவும் அருளினமை காண்க.

அடி-2: போழ் வார் போத்த - தோலை வாரால் தைத்த. 'போழ்' என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளைக் குறித்தது. போழ்தல் - உரித்தல். தாழ் அகச் செருப்பு - தாழ்ந்த உள்ளிடத்தை யுடைய செருப்பு.

அடி-3: சுரிகை எஃகம் - குற்றுடைவாளாகிய படைக்கலம். எஃகம் - கூர்மை. அதுவும் ஆகுபெயராய், அதனையுடைய படைக்கலத்தைக் குறித்தது. 'எஃகத்தோடு கட்டிய' என உருபு விரித்துரைக்க.

அடி-4: 'உடையாகிய தோலின்மேல் கச்சையை உடையன்' என்க. 'உடைத் தோல்' என்பதில் தகர ஒற்றுத் தொகுத்தலாயிற்று.

அடி-6: 'வீக்கிய வாரின் வரி' என மாற்றிக் கொள்க. வீக்கிய - கட்டி முடிந்த. வாரின் வரி - வாரால் திரிக்கப்பட்ட கயிறு. கட்டியன் - கட்டினவன்; கட்டியிருப்பவன்.