பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை432

கட்டளைக் கலித்துறை

527.பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின்பேரருளின்
சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யே?திரியும்புரமூன்(று)
அறப்பாய் எரியுற, வான்வரை வில்வளைத்(து)ஆய்இரவாய்
மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.

8


எண்ணுதலாலும் பொருந்துகின்றது எனவே,மேற்போக்கில் ஏனையோரும் சிவன்செய்தவற்றையே செய்வார் போலக்காணப்பட்டாலும், சிவன் தனக்குப் பற்றுயாதுமின்றி அருள் காரணமாக எல்லாவற்றையும்,பிறர் பொருட்டாகவே செய்து பெரியன் ஆதல்போலஆதல் பிறர்க்குக் கூடாது' என விளக்கியவாறு.

கலுழிக் கங்கை - (சடைக் காட்டின்இடையே பாய்தலால்) கான்யாற்றைப் போலும் கங்கை.'கங்கையிலே அரா (பாம்பு) போதும் (புகும்) சடை'என்க.

527. குறிப்புரை; "திரியும் புரம்மூன்று" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க,திரியும் புரம் - வானத்தில் உலாவும் கோட்டைகள்.இங்ஙனம் கூறியதனால் 'திரிபுரம்' என்பதுவினைத்தொகையாகவும் கொள்ளுதற்கு உரித்தாதல்அறியப்படும். "திரியும் புரம்" என்றேதிருமுறைகளில் பல இடங்களில் வருதல் காணலாம்.அறப் பாய் எரி - முற்றும் அழியும்படி பற்றும் தீ. உற- பொருந்தும்படி வான் வரை - சிறந்த மலை; மகாமேரு.இனி, 'உறுவான்' என வான் ஈற்று வினையெச்சமாகப்பாடம் ஓதலும் அம். 'வில்லாக' என ஆக்கம் வருவிக்க.ஆயிர வாய், மற, பாவரி அர - ஆயிர வாய்களையும்,கொடுமையையும், பரவியவரிகளையும் உடைய பாம்பு.செய்யு ளாதலின். 'அர' என்பதில் குறிற்கீழ்ஆகாரம் உகரம் செலாது குறுகிமட்டும் நின்றது. இடை -வில்லின் கண். வானவன் - தேவன். 'பிறப்பாகிய ஆழ்குழி' எனவும். 'அருளாகிய சிறப்பு' எனவும் உரைக்க.சிறப்புத் தருவதனைச் "சிறப்பு" எனஉபசரித்தார். சிறப்பாவது வீடாதலைச்"சிறப்பீனும் செல்வமும் ஈனும்","சிறப்பென்னும் செம்பொருள்" என்னும் திருக்குறள் களால்1 அறிக. "அருளின்"என்பதில் இன், தவிர்வழி வந்த சாரியை.'சிறப்பைத் தருவதாகிய அருள் நிறைந் திருக் கை'என்றபடி. ஆழ் குழியில் வீழ்ந்தாரை எடுப்போர்கைதர வேண்டியிருத்தலை நினைக. கிற்றியே -வல்லையோ? 'என்னைப் பற்றியுள்ள மலங்கள் மிகவலியன் என்பார், 'வல்லையோ' என்றார்.


1. குறள் - 31, 358.