பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை434

வெண்பா

530.கண்ணி இளம்பிறையும், காய்சினத்த மாசுணமும்
நண்ணி இருந்தால் நலம்இல்லை; - தண்அலங்கல்
பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ்சடைப்புனிதா,
வாங்கொன்றை இன்றே மதித்து.

11


சொல் பல்காமைப் பொருட்டு இருமுறை கூறாதுஒருமுறையே, கூறினார் ஆகலின், அதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தாதல் அறிக. "என்பர்"என்பது பிற இடங்களிலும் சென்று இயைவது. உடையாள் -அனைத்தையும் உடையவள். வரை ஈன் - மலை பெற்ற. இளவஞ்சி அன்ன - இளைய வஞ்சிக் கொடிபோன்ற மடம்.மகளிர் குணம் நான்கனுள் ஒன்று. பால் மொழி, பால்போலும் சொற்களை உடையவள். "மழுவும்"என்னும் உம்மையே "வலப் பாகத்து" என்பதனோடுகூட்டுக. "கச்சு" என்றதனால், 'வயிறு' என்பதுவருவிக்கப்பட்டது. கடம் - மதம். 'யானையைஉரித்துப் போர்த்தது பிறர்மேல் வைத்த கருணையால்' என்பதே இங்குப் புலப்படுத்தக் கருதியது.

530. குறிப்புரை: "தண்அலங்கல்..... புனிதா" - என்பதை முதலிற் கூட்டி,'மதித்து, இன்றே வாங்கு' என மாற்றி வைத்து உரைக்க.கண்ணி - முடியில் அணியும் மாலை. 'கண்ணியாகிய பிறை'என்க. மாசுணம் - பாம்பு. 'பிறையும், பாம்பும் பகைப்பொருள்கள். ஆகையால், அந்த இரண்டையும் உனதுசடையில் சேர்ந்து இருக்க வைத்தால் நன்மையில்லையாம். (தீமை விளையும்). ஆகையால், இதனைப்பொருட்படுத்தி உணர்ந்து, அந்த இரண்டில் ஏதேனும்ஒன்றை இப்பொழுதே நீக்கிவிடு' என்க. இஃது, இறைவனதுஅருளாற்றலின் சிறப்பை உணராவதவர் போல அச்சம்உற்றுக் கூறியது. இங்ஙனம் கூறும் முகத்தால், பகைப்பொருள்களும் சிவனை அடைந்தால் பகை நீங்கிநட்புற்று வாழ்தலை உணர்த்தியவாறு.

'ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ஊரும்அப் பாம்பும் அதனையே;
ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே'1

என்பதும்,

'பாம்பும், மதியும்,புனலும் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி'2

என்பதும் அப்பர் திருமொழிகள்.


1. திருமறை - 5.24.1.
2. திருமறை - 6.5.4.