பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை46

யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க்(கு) ஆட்பட்ட
பேரன்பே இன்றும் பெருக்கு. 

31

 

75.

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும்; - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். 

32

 

76.

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக;
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த(து)
எக்கோலத்(து) எவ்வுருவாய்? எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்(து) அவ்வுருவே ஆம். 

33


‘அங்ஙனம் ஆட்பட்ட பேரன்பையே இன்னும் பெருக்கு’ என முடிக்க. ‘பெருக்கினால் இன்னும் பெருநலம் பெறுவாய்’ என்பது குறிப்பெச்சம். மகிழ்தி - மகிழ்கின்றாய்; மானுடரில் நீயும் ஒருவனாய்த் திகழ்கின்றாய். சேமம், பாதுகாவல். ‘என்பே அணிந்து உழல்வார்’ என்றதும் நிந்தாத் துதி. அவர்க்கு ஆட்படுதலே மானுடப் பிறப்பின் பயன்’ என்றபடி

75. அ. சொ. பொ.: தெரியின் முதற்கண்ணான் - அறிவு வாய்க்கப் பெற்று ஆராய்ந்தால் முதலிடத்தில் வைத்துப் போற்றுதற்கு உரியவன்; ‘இல்லையேல் இகழப்படுவான்’ என்பதாம். இது முதலாகத் தொடங்கியுரைக்க. “நுதற் கண்ணான்” என்பது, ‘சிவன்’ என்னும் பெயரளவாய் நின்றது. மூவா - கெடாத; இஃது இனம் இல் அடை. ஒளிய - ஒளியை யுடைய கதிர் - கலை.

76. அ. சொ. பொ.: “நீர்மையே” என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, “ஆம்” என்பதனுடன் கூட்டி, இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. ‘உலந்த’ என்பது பாடம் அன்று. உலந்தது - விரும்பியது; ‘எக்கோலத்தை யுடைய எவ்வுருவினிடத்து’ என்க. வாய், ஏழனுருபு. கோலம் ஆடை அணி முதலியன. உருவு - வடிவம். ‘அவ்வுருவை நோக்கி’ என இசை யெச்சம் வருவிக்க. ‘ஆமே என்னும் முற்று, சொல்லுவார் குறிப்பால், ‘ஆதலே’ என்னும் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. இதன்பின் “நுழைவு இலாதார்” - என்பதைக் கூட்டி இதனை அறிந்து இவனை அடைய மாட்டாதார் திரிக என முடிக்க. நூல், தாம் தாம் அறிந்த நூல். அவை இரணிய கருப்பம், பாஞ்சராத்திரம் முதலியன. அறிவு - அறிந்த பொருள். ‘தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்ற அவர்கட்கு அருளுதலே இவனது இயல்பு’ என்பதை யறியாதார், ‘பொடி பூசி, எலும்பணிந்து, சுடலையாடுதலையே இவனது உண்மை யியல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர்; அது பற்றி எமக்கு வருவதோர் இழுக்கில்லை’ என்றபடி.