பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை476

613.பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான், பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும், ஆக்குதிகாண், நெஞ்சே,கூர்ந்(து)
அஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.

57

614.ஆககூர் பனிவாடா, ஆவிசோர்ந் தாழ்கின்றேன்;
ஆக்கூர் அலர்தான் அழகிதா? - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன், நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.

58


613.குறிப்புரை: பதங்கம் -பறவை. அது கருடனைக் குறித்தது. வரை - மலை, கருடனாகியமலைமேல். உயர்ந்தான் - ஏறி வருபவன்; மாயோன்.பால் - அவனது பாகத்தை. மகிழ்ந்தான் -தன்பாகத்தில் இருக்க விரும்பினவன். பதங்கன் -சூரியன். சூரியன் தக்கன் வேள்வியில் பல்உதிர்க்கப்ட்டான் அவனது பதம் - பாதங்களில், நெஞசே, அன்பாலும் கூர்ந்து அஞ்சலிகள் (கும்பிடுகள்) ஆக்குதி; (அதனால்) என்பாலும் நீஅஞ்சலிகள் (அஞ்சாமைத் தன்மைகளை) ஆக்கு.அஞ்சப்படும் பொருள்கள் பலவாகச்சொல்லப்பட்டன. 'சிவபெருமானைத் தொழுதால் நாம்எதற்கும் அஞ்ச வேண்டுவதில்லை' என்பது கருத்து, "சுண்ணவெண் சந்தனச் சாந்தும். உடையார் ஒருவர்தமர் நாம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்சவருவதும் இல்லை"1, "நாம் ஆர்க்கும்குடியல்லோம்; நமனை யஞ்சோம்"2 என்னும் அப்பர்திருமொழிகளையும் "அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்....கொன்றை நயந்தாளும் - பச்சம்முடைஅடிகள் திருப்பாதம் பணிவாரே"3 என்னும்திருஞானசம்பந்தர் திருமொழியையும் காண்க. காண்,முன்னிலை யசை. என்பாலும் - என்னிடத்திலும்.

614.குறிப்புரை: "ஆக்கூர்" மூன்றில் முதலது, "ஆக்கு ஊர் பனி'எனப் பிரிந்து, 'பொழிகின்ற, உலகை மறைக்கின்றபனி' எனப் பொருள் கொள்ளுதற்கு உரியது. இயைடது,ஊர் ஆக்கு அவர் - ஊரார் தூற்று பழி. இறுதியது, 'திருஆக்கூர்'த் தலம். மாடம் - மாடக் கோயில்.மறை ஓம்பு மாடம் - காவல் செய்கின்ற மாடம். மாமறையோன், சிவபெருமான், ஈற்றடியில் உள்ள மறை, வேதம் மாதவர், அந்தணர். வந்து - வந்ததனால் 'திருஆக்கூர்ப் பெருமான் அங்குள்ள அந்தணர்களுக்கு அருள்புரிய வேண்டி வீதியில் வந்ததனால் நான்பனியால் வாடி ஆவி சோர்ந்து ஆழ்கின்றேன்' எனக்கைக்கிளைத் தலைவி கூற்றாக உரைத்துக் கொள்க.


1. திருமுறை - 4.2.1.
2. திருமுறை - 6.98.1
3. திருமுறை - 1.18.1.