பக்கம் எண் :

477சிவபெருமான் திருவந்தாதி

615.வந்தியான் சீறினும் வாழி! மடநெஞ்சே!
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்,
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை,
நம்பரனை நாள்தோறும் நட்டு.

59

616.நட்டமா கின்றன வொண்சங்கம்; நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி, எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.

60

617.இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே?
இலமலரே ஆயினும் ஆக; - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.

61


615.குறிப்புரை : மூன்றாம்அடியில் 'நம்பு + அரனை' எனப் பிரிக்க. நம்புதல் -விரும்புதல். அரனை, சடையானை, பரனை (அவன்)வந்தியாய் வந்த பொழுது யான் சீறினும் நெஞ்சே(நீ அவனை) நாள்தோறும் நட்டு நட்புக் கொண்டுவந்தியா (வந்தித்து - வணங்கி) உள்ளத்துவைத்திராய்' என இயைத்து முடிக்க. தனிச் சீரில்உள்ல "வந்தி" - மங்கலமாகப் படுபவன்.'வந்தியாய் வந்து' என முன்னே கூட்டுக. "வந்து"என்பதனை, 'வர' எனத்திரித்துக் கொள்க. 'ஆற்றாமைகாரண மாக எனக்குச் சீற்றம் எழலாம்; ஆயினும் நீஅவனை வெறாதே' எனத் தலைவி தன் நெஞ்சிற்குஅறிவுறுத்தினாள். வாழி, முன்னிலை யசை.

616.குறிப்புரை: நட்டம்ஆகின்றன இழப்பு ஆகின்றன. சங்கம் - சங்க வளையல்.நட்ட மா நன்னீர்மை - நட்புக் கொண்ட பெரிய,நல்ல இயல்பு. 'நன்னீர்மையால்' என உருபு விரிக்க.நட்டம் ஆடியான் - நடனம் ஆடுபவன். 'ஆடியான்' என்பதுநீட்டல் பெற்றது. "இலம்" என்னும் பன்மைஇரக்கக் குறிப்புணர்த்தி, "நான்" என்றஒருமையோடு மயங்கிற்று. இதுவும் கைக்கிளைத் தலைவிதோழியை மாலையிரக்க வேண்டியது.

617.குறிப்புரை: மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, "ஆடினேன்" என்பதைஇறுதிக்கண்ணும், "இலமலரே ஆயினும் ஆக"என்பதை அதன்பின்னும் கூட்டி யுரைக்க. மூன்றாம்அடியில் உள்ள "ஆம்பல்" என்பது ஆம்பலமலரின் நிறத்தைக் குறித்தது. "செவ்வாயார்"என்றதும், "சேவடியார்" என்றதும் தோழியரை.ஏகாரம் வினாப் பொருட்டு. ஆடுதல் - உரையாடுதல்.இரண்டில் முன்னது வெளிப்படுத்துதலையும், பின்னதுஅளவளாவுதலையும் குறித்தன. ஈற்றடியில் "ஆம்"என்பதில் 'ஆளாய்' என ஆக்கம் விரிக்க.