| தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு. | | 38 |
| 82. | கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடிஅணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து. | | 39 |
| 83. | மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்(டு) உள்ளாதார் கூட்டம் ஒருவு. | | 40 |
எதிர்மறை வினாப் பொருட்டாய் உடன்பாட்டுப் பொருளைத் தந்தது. தார் - மார்பில் அணியும் மாலை, ‘தாராக ஏறிய பாம்பு’ என்க. கூர் ஏறு - கூர்மை பொருந்திய. ஏனம் - பன்றி, திருமால் கொண்ட வராகாவதாரத்தின் இறுதியில் அதனை அழித்து, அதன் கொம்பைச் சிவபிரான் மாலையில் கோத்தணிந்தமை புராணங்களில் கூறப்படுவது. “முற்றல் ஆமை, இளநாகமோடு, ஏன முளைக் கொம்பு அவை பூண்டு”1 என்றமையும் காண்க. இறைவன் மார்பு வானத்திற்கும், அதில் அணியப்பட்ட பாம்பு இராகுவிற்கும், ஏனக் கொம்பு திங்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டன. திங்கள் சிறுகியதற்குக் காரணம் கற்பித்தது தற்குறிப்பேற்றம். எனவே, இது தற்குறிப்பேற்ற உவமையணியாதல் அறிக. இங்ஙனம் இறைவனது மார்பணி யைப் புகழ்ந்தவாறு. 82. அ. சொ. பொ.: கொம்பு, பூங்கொம்பு. அஃது உவம ஆகுபெயராய், உமாதேவியைக் குறித்தது. குழகன் - அழகன். தன், சாரியை அம், அணி, மணி இவை அழகைக் குறிக்கும் பெயர்கள். பவள மேனி, உவமத் தொகை, அது, பகுதிப் பொருள் விகுதி. வரை - மலை, பொடி - நீறு, மறித்து - மீள, ‘மேனி, முன்னம் செம்பொன் வரையேபோலும்; பின்பு வெள்ளி வரையே போலும்’ என்க. ‘இஃதோர் அதிசயம்’ என்பது குறிப்பெச்சம். இறைவனது திருமேனியின் இயற்கை யழகையும். செய்கை யழகையும் புகழ்ந்தவாறு. 83. அ. சொ. பொ.: ‘நெஞ்சே, தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை நீக்கு’ என்க. ‘முன்னே நெஞ்சால் நினைத்து, மீள வாயாலும் வாழ்த்திப் பின் மெய்யாலும் வணங்குகின்ற தொண்டர்’ - என்க. முப்பொறிகளாலும் தொண்டு செய்பவர்’
1. திருமறை - 1.1.2.
|