பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை50

84.

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால், - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ, மின்னுருவோ? நேர்ந்து. 

41



என்றபடிஉம்மை, இறந்ததையும், எதிரதையும் தழுவிநின்றது. ‘குறித்து’ என்பது, முன்னர்க் காணுதலாகிய காரியத்தையும், பின்னர்ச் சேர்தலாகிய காரியத்தையும் குறித்தது. ஒருவர் கொள்ளாத திங்கள் - சிறிதாதலால் யாரும் விரும்பாத பிறை. ‘எவரும் விரும்பாதன எவையோ, அவையே எங்கள் பெருமானால் விரும்பப்படுவன’ என்பதாம், ஆகவே ‘இவனை, உலகம் - பித்தன் - என்று இகழ்தல் இயற்கை! என்றபடி

“பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்”1 என்று அருளிச் செய்தமையுங் காண்க. ‘ஒருவரும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.

84. அ. சொ. பொ.: உலகு அளந்த மாலாதல் இடப் பாதியும், உமையவளாதல் வலப் பாதியும் என்க. ‘சிவன் எல்லா வற்றையும் சக்தி வழியாகவே தோற்றுவிப்பன்’ என்பது முடிவா தலால் ‘மாயோனை இடப்பாகத்தினின்றும் தோற்றுவிக்கும் நிலைமையில் வலப்பாகம் சக்தி பாகமாய் நிற்கும். என்பது பற்றி, “ஒருபால் மாலவனாம், மற்றை ஒருபால் உமைய வளாம்” என்றும், இந்நிலைமையில் ‘சிவம்’ என்பதே இல்லாதது போலத் தோன்றுதலால், இருபாலில் ஒரு பாலையும் நின்னுருமாகத் தெரிய மாட்டேம்’ என்றும், இங்ஙனமாகவே, சிவமேதான் சத்தியோ? ‘சிவம்’ என்பது வேறு இல்லையோ? என வினாவும் முறையில், ‘நின்னுருவே மின்னுருவுதானோ’ என்றும் அருளிச்செய்தார். மின் - பெண்; உமை. சிவமும், சத்தியும் இருபொருள்கள் அல்ல’ என்பது விளங்குதற்கு இங்ஙனம் நகைச்சுவை தோன்றக் கூறினார். நிறம், ‘உரு’ என்னும் பொருட்டாய், வடிவத்தைக் குறித்தது. ‘இந்நிறத்தை இரு பாலிலும் நின் உருவமாகத் தெரிய மாட்டோம்’ என இயைக்க. ஓகாரம் இரண்டில் முன்னது சிறப்பு; பின்னது வினா, ‘நின் உருவமாக நேர்ந்து தெரிய மாட்டோம்’ எனக் கூட்டுக. ‘நேர்ந்து தெரியமாட்டோம்’ என்றாராயினும், ‘தெரிந்து நேரமாட்டோம்’ எனப்பின்முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. நேர்தல் - உடன் படுதல். சிவம் சத்திகளது இயல்பை விளக்கியவாறு.


1. திருமுறை - 7.29.1