| 85. | நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ? நீயதனை ஈர்ந்தளவே கொண்டி சைய வைத்தாயோ? - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ? என்னோ, இளங்குழவித் திங்கள் இது? | | 42 |
| 86. | திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல், யாம்விலக்க வல்லமே தானே யறிவான் தனக்கு. | | 43 |
85. அ. சொ. பொ.: அங்கு - வானத்தில். ‘அங்கு அரவம் நேர்ந்து (எதிர்ப்பட்டுக்) கொள்ள (விழுங்க, அதனால்) சிறுகிற்றோ? இசைய (உனக்குப் பொருந்த) அளவே ஈர்ந்து, (அளவாகப் பிளந்து எடுத்து) வைத்தாயோ? பேர்ந்து காலத்திற்கு ஏற்ப மாறி) வளர மாட்டாதோ? (மாட்டாத தன்மையை உடையதோ?) இளங் குழவித் திங்கள் இது (என்றுமே பசுங்குழவியாய் இருக்கின்ற திங்களாகிய இதன் தன்மை) என்னோ?’ என இயைத்துக் கொள்க. ‘வளக் குழவி’ என்பது மெலிந்து நின்றது. குழவித்தாய் குழவித் தன்மை யுடையதாய். இளங்குழவி - பசுங்குழவி. இறைவன் அணிந்துள்ள பிறை என்றும் ஒரு பெற்றித்தாய் இருத்தலைப் புகழ்ந்தவாறு. 86. அ. சொ. பொ.: “எங்கள் பெருமானே” என்பதை முதலில் வைத்து உரைக்க. ‘இது, என்பது, எடுத்தல் ஓசையால், ‘இத்தன்மைத்து’ எனப்பொருள் தந்து நின்றது, ‘இவன் எவ்வாறு அவனை வெல்ல முடியும்’ எனக் கூறினால் அதில், ‘இவன், அவன் என்பன ஓசை வேறுபாட்டால், ‘இத்தன்மையன், அத்தன்மையன்’ எனப் பொருள் தருதல்போல. ‘சிறிதாய்ப் பயன் தாராதது’ என்றதாம். ‘பிச்சை யேற்பவன் வேடத்தாற் பொலிவுடையனாயின் அது பற்றியேனும் பிச்சையிடுவர்; அது தானும் செய்கின்றிலையே’ என்றபடி. சில் பலி ‘இன்னதுதான் ஏற்பது’ என்பதின்றி இடுவர் இடுவனவாகிய எல்லாப் பிச்சையும், “ஊர்” என்பதன்பின், ‘தொறும்’ என்பது தொகுக்கப்பட்டது. பொங்கொளிய - மிக்க ஒளியான உடம்பையுடைய. ‘தேவர்’ என்பது ஒளியுடம்பினர்’ என்னும் பொருளதாதல் பற்றி, “பொங்கு ஒளிய வானோர்’ என்றார். ‘வானோரே’ என்னும் சிறப்புணர்த்தும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. “விலக்காரேல்” என்றது, விலக்க வல்லரல்லராயின்’ என்றபடி “வல்லமே” என்னும் ஏகாரம் எதிர்மறை வினாவாய் நின்று, மாட்டாமையைக் குறித்தது. ஈற்றடியைத் தனித் தொடராக வைத்து, முதற்கண், ‘இனி’ என்பது வருவிக்க. இறுதியில் ‘ஆவதை’ என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. ஈற்றடியால், ‘எம் பெருமான், தனக்கு ஆவதைப் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறிவான்
|