பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை496

பரணதேவ நாயனார்
அருளிச் செய்த

23. சிவபெருமான் திருவந்தாதி

வெண்பா
திருச்சிற்றம்பலம்

657.ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின், உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான்.

1

658.பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப்
பிரானிடபம் பேரொலிநா ணாகம்; - பிரானிடபம்
பேணும் உமை;பெரிய புன்சடையின் மேலமர்ந்து
பேணும் உமை, யிடவம் பெற்று.

2


657. குறிப்புரை: ‘உலகீர்’ என்பதை முதற்கண் வருவித்து, தனிச் சீரில் உள்ள “ஒன்றுரைத்து” என்பதை, “உறுதுணையாம்” என்பதற்கு முன்னே கூட்டி, அவ்விரண்டையும் இறுதிக்கண் வைத்து உரைக்க. “ஒன்று” மூன்றில் முதற்கண்ணது, ஒருபொருள். இடையது, யாம் சொல்கின்ற ஒன்று. அது சிவனது திருப்பெயர். ஈற்றில் உள்ளது, பிறழ்தல் இல்லாத ஒரு சொல். அது, ‘நீவிர் விரும்பியதைத் தருகின்றோம்’ என அருளிச் செய்வது. “அரவம்” இரண்டில் முன்னது, பாம்பு; பின்னது ஆரவாரம்; பழிச்சொல். அவை, ‘பாம்பை அணிகின்றான், தலை யோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றான்’ என்றாற் போல்வன. ‘உலகீர் அவனது பெருமையை யறியாமல் அறிவிலாதாரால் இகழப்படுகின்ற சிவபிரானது திருப்பெயரைச் சொல்வீராயின், அவன் நீவிர் விரும்பியதைத் தப்பாமல் பெறும் வரத்தை அருளுவான்’. பலபொருள்களை உரைத்தல், உண்மையை உணராது அலமருதலாலாம். ஓயாது - மெலியாமல்.

658. குறிப்புரை:ஈற்றில், ‘உம்மை’ என்பது இடைக் குறைந்து, “உமை” என வருதலால் அதற்கேற்பப் “பிரான்” என்பவற்றை அண்மை விளியாக்கி, ‘உமது இடபம் மால்’ எனவும், ‘உமது வில் மந்தரம்’ எனவும், நீர் இட; பம் - பேரொலி நாண் நாகம்’ எனவும், ‘உமது இட அம் உமை பேணும்’ எனவும், ‘நீர் இட, அம், பெரிய புன்சடைமேல் அமர்ந்து உம்மைப் பேணும்’ எனவும் உரைக்க. மால் - விட்டுணு. ‘மந்தரம்’ என்பது நீட்டல் பெற்றது. இரண்டாம் அடியில்,