பக்கம் எண் :

499சிவபெருமான் திருவந்தாதி

664.அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய்
அருள்சேரா(து) ஆரூர்தீ யாடி -அருள்சேரப்
பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற்கால்நிமிர்த்துப்
பிச்சையேற்று உண்டுழல்வாய்பேச்சு.

8

665.பேச்சுப்பெருக்குவதென்பெண் ஆண் அலியென்று
பேச்சுக் கடந்தபெருவெளியைப் - பேச்சுக்(கு)
உரையானை ஊனுக்குஉயிரானை ஒன்றற்(கு)
உரியானை நன்னெஞ்சேஉற்று.

9

666.உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன்
உற்றுரையா வண்ணம்ஒன் றானா னை - உற்றுரையா
ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுதும்
ஆனையுரித் தானை அடைந்து.

10


வருவித்து “என்று அருள் - என்னை அடியனாக ஏற்று அருள் புரி” - என உரைக்க.

664.குறிப்புரை: அடி - 1 - அருள் சேராதார் ஊர் - உன்னுடைய திருவுள்ளக் கனிவை அடைய விரும்பாத அசுரர்களது திரிபுரம். அடி - 2 ‘அருள் சேராது எய்தாய்’ என இயையும். இதன்கண் உள்ள அருள் - இரக்கம். “ஆரூரில் உள்ள தீ ஆடி என்பது விளி. இதனை முதற்கண் வைத்து உரைக்க வினையொடு தொக்க ஏழாவதன் தொகையில் வல்லினம் மிகாது, இயல்பாயிற்று. தனிச்சீரில் உள்ள அருள் - ஞானம். இறை உணர்வு இல்லாதார் அவ்வுணர்வைப் பெறவேண்டி அடி - 3. பித்து. ‘பிச்சு’ எனப் போலியாய் வந்தது. அது பேரருளைக் குறித்தது. ‘பேரருளை ஏற்று, அதனால் நலிவுண்டு’ என்க. ‘பிச்சை ஏற்பான்போலச் சென்று இரத்தல் பெருங் கருணை காரணமாக என்றபடி. கடை - தலைவாயில். “பேச்சு” என்பதற்கு, ‘இஃதே எங்கும் நிகழ்கின்ற பேச்சு’ என்க. அஃது இகழவாய் பேச்சையே குறித்தது.

665.குறிப்புரை: “பேச்சுப் பெருக்குவது என்” என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க. பேச்சுக்கு உரை - சொல்லுக்குப் பொருள். ஊன் - உடம்பு. ‘சொல்லுக்குப் பொருள் போலவும், உடம்பிற்கு உயிர்போலவும் எப்பொருட்கும் களைகணாய் உள்ளவன்’ என்றபடி “ஒன்றற்கு” என்பதன் ‘உவமையாக’ என்பது வருவிக்க. உரையான் - சொல்லப்படான். உற்று - அடையத் தொடங்கி. ‘பேசாமை, அஃதாவது மோன நிலையாலே அடையத் தக்கவன்’ என்றபடி.

666.குறிப்புரை: “நன்னெஞ்சே” என்பதை முதலிலும், “உற்றுரையாய்” என்பதை இறுதியிலும் வைத்து உரைக்க. உற்று உரையாய். அணுக நின்று நின் குறைகளைச் சொல்வாயாக.