பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை506

680.சாராவார் தாமுளரேல், சங்கரன்; தன் மேனிமேல்
சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாம்
அரவமது செஞ்சடைமேல்; அக்கொன்றை ஒற்றி
அரவமது செஞ்சடையின் மேல்.

24

681.மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம்
மேல்ஆயம் இன்றியே உண்பொழுதின் - மேலாய
மங்கை உமைவந் தடுத்திலளே வான்ஆளும்
அங்கை உமைவந்(து) அடுத்து.

25


கோட்டினை; “கொடுந் தானைக் கோட்டழகும்”1 என நாலடியாரிலும் கூறப்பட்டது. “தான்” என்பன பலவற்றிலும் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ‘அயனும், மாலும் ஆகி நின்றான்’ என்றது, ‘அவர்கள் வழியாகப் படைத்தல் காத்தல்களை நிகழ்விக்கின்றான்’ என்றபடி. அடி-2-ல், ‘அயல் உலகில் தனித்து மால் ஆய தன்மையான் - அவ்விருவரின் வேறாய் உயிர்களிடையில் தனி ஒருவனாய்ப் பெரும் பொருளான தன்மையை யுடையவன். மால் - பெருமை. நான்மறையை அக் கரைப்படுத்தான் - நான்கு வேதங்களை ஒரோர் வரம்பிற்கு உட்படுத்தினான். அவ்வரம்பு களாவன ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்பன. இவ்வாறு நாற்பொருளைக் கூறும் நான்கு நூல்களே நான்கு வேதங்கள்’ எனக் கூறுதல் தமிழ் வழக்கு. இவைகளால் எல்லாம் இறைத் தன்மையை விதந்தவாறு, தன் பாதம் சார் - அவனுடைய திருவடிகளையே (நெஞ்சே) புகலிடமாக அடை.

680. குறிப்புரை: ‘சார்வு’ என்பது முன்னர் இரண்டிடங் களில் இறுதிநிலை கெட்டு. “சார்” என நின்றது. சார் ஆவார் தாம் உளரேல் சங்கரன் எவர் ஒருவர்க்கும் சார்வாக (பற்றுக் கோடாக) ஒருவர் உளர் என்றால் அவர் சிவன் ஒருவனே. (முன்னர்ப் பொதுவாகக் கூறிப் பின்னர்ச் சிறப்பாக விதந்தமையால் பன்மை ஒருமைகள் மயங்கின.) அஃது எங்ஙனம் எனின், கங்கையும், உமையும் முறையே அவனது செஞ்சடை மேலும், மேனிமேலும் அவைகளையே சார்வாகப் பற்றித் தங்கள் ஆரவாரத்தை அடக்கியுள்ளனர். பாம்பு அவனுடைய செஞ்சடைமேல் கொன்றை மாலையை ஒற்றினாற்போல உள்ளது. தனிச்சீரில் உள்ள “சார்வாம்” என்பதை இறுதியிற் சேர்க்க. கங்கையும், உமையும், பாம்பும் அவனையே பற்றுக்கோடாகப் பற்றியுள்ள நிலைமை, ‘அனைத்துயிர்கட்கும் பற்றுக் கோடு அவனே’ என்பதைக் குறிக்கும் அடையாளங்களாம் - என்பது கருத்து. “அரவம்” இரண்டில் முன்னது ஆரவாரம்; பின்னது பாம்பு.

681. குறிப்புரை: அடி-2-ல் ஆயம் இன்றியே - வேறு ஒருவர் துணை யில்லாமலே, ‘நீர் உண் பொழுதின்’ என்க. இங்ஙனம்


1. வெண்பா - 131.