பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை510

689.வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால்
வாய்த்த அடிமுடி யுங்காணார்; - வாய்த்த
சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ!
சலந்தரனாய் நின்றவா தாம்.

33

690.தாம்என்ன நாம்என்ன வேறில்லை தத்துறவில்
தாம்என்னை வேறாத் தனித்திருந்து - தாமென்
கழிப்பாலை சேருங் கறைமிடற்றார்; என்னோ
கழிப்பாலை சேருங் கடன்.

34


பொருந்தி ஏற்றுக்கொண்டு. பாத மலர், உருவகம். மால் - திருமால். நயனம் ஆகும் மலர் அணைந்து - தனது கண்ணாகிய மலரைச் சாத்தி. ‘அணிந்து’ என்பது எதுகை நோக்கி “அணைந்து” எனத் திரிந்து நின்றது. இனி, ‘அணைவித்து’ எனினும் ஆம். மன் - நிலை பெற்ற. வாள் - படைக் கலப் பொது. ஆல், அசை. ‘இது போற்றத் தக்க ஒன்று’ என்பது குறிப்பெச்சம் “வாய்த்து” என்பதை, ‘வாய்ப்ப’ எனத் திரித்து, “வாளா” என்பதன்பின் கூட்டுக.

689. குறிப்புரை: அடியார்கள் எளிதில் கண்டு வணங்க, மலரோனும், மாலும் தேடியும் காணாராயினார் என்பதும், ‘சலந்தரனைக் கொன்றது போலும் மறக் கருணையை உடையன் ஆயினும் கங்கையைத் தலையில் தாங்கியது போலும் அறக் கருணையை உடையன்; என்பதும் கூறியவாறு. “சலந்தரன்” இரண்டில் முன்னது ஓர் அசுரன். பின்னது சலத்தை (கங்கையை)த் தரித்தவன். ‘தாம் சலந்தரனாய் நின்றவா என்னோ’ காண்க.

690.குறிப்புரை: “கழிப்பாலை” இரண்டில் முன்னது ஒரு தலம்; சோழநாட்டில் காவிரியின் வடகரையது; கொள்ளிடக் கரையது. பின்னது, அனைத்தையும் கழித்து நின்ற இடம்; நிலைமை. தாமென் கழிப்பாலை - அலைகள் தாவுகின்ற ஈர நிலமாகிய திருக்கழிப்பாலை. தாம் - கறைமிடற்றார். நாம் - உயிர்கள். தத்து உறவு - ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பு ‘தாமும், நாமும் பொருளால் வேறாயினும், ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் தொடர்பில் வேறாகாது ஒன்றாவேம்; அஃதாவது, இருமையில் ஒருமையாவேம் என்றபடி. ‘அவ்வாறி ருக்கவும், அவர் என்னின் வேறாய்த் தனித்திருப்பது, அனைத்தையும் கழித்து நாம் தனியே நின்ற நிலையில் மட்டுமே அடைய நிற்கின்ற கடன் (முறைமை) என்னோ’ என்க. இறைவன் உயிர்களோடு உயிர்க்கு உயிராய் ஒன்றியிருப்பினும் பாசத்தடையால் உயிர்கள் அவனை அடைந்து அவனது இன்பத்தைப் பெறமாட்டாது கிடந்து, பாரத் தடை நீங்கிய பின்பே அவனை யடைந்து இன்புறுதலை விதந்தவாறு.