பக்கம் எண் :

515சிவபெருமான் திருவந்தாதி

702.புகலூர் உடையாய்! பொறியரவம் பூணி!
புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய்!
வெண்காடா! வேலை விட முண்டாய்! வெள்ளேற்றாய்!
வெண்காடா என்பேனோ, நான்.

46

703.நானுடைய மாடே! என் ஞானச் சுடர்விளக்கே!
நானுடைய குன்றமே! நான்மறையாய்! - நானுடைய
காடுடையாய்; காலங்கள் ஆனார் கனலாடும்
காடுடையாய்! காலமா னாய்!

47

704.ஆயன் றமரர் அழியா வகைசெய்தான்,
ஆயன் றமரர் அழியாமை - ஆயன்
திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி
திருத்தினான் சேதுக் கரை.

48


702. குறிப்புரை: “புகலூர்” மூன்றில் முதலது திருப்புகலூர்த் தலம். பொறி - படத்தில் உள்ள புள்ளிகள். இடையது - புகுதலை யுடைத்தாய்ப் பொங்குகின்ற புனல் என்க. இறுதியது யாவரும் சிறப்பித்துச் சொல்கின்ற கயிலாயம். அதனை, “ஊர்க்கோட்டம்”1 என்ற சிலப்பதிகாரத்தாலும் உணர்க. “வெண்காடு” இரண்டில் முன்னது சோழநாட்டுத் தலம். பின்னது, சாம்பலால் வெண்மையைப் பெற்ற சுடுகாடு. “புகலூர் உடையாய்.... வெள்ளேற்றாய்! உன்னை நான் சுடுகாட்டில் ஆடுபவன்’ என்று இகழ்வேனோ என்க.

703. குறிப்புரை: “நானுடைய” மூன்றும் சொற்பொருட் பின்வருநிலை யணியாயே வந்தன “காடு” இரண்டில் முன்னது, “நானுடைய காடு” என்றதனால் வினைக்காடாயிற்று. பின்னது, “கனலாடுங் காடு” என்றதனால் முதுகாடாயிற்று. காலங்கள் ஆனார் - தம் தம் காலம் முடியப் பெற்றார். ‘நானுடைய மாடே” என்பன முதலான விளிகள் பலவற்றையும் முன்னே வைத்து, ‘வினைக் காட்டை உடைத் தெறிவாயாக’ என முடிக்க. மாடு - செல்வம்.

704. குறிப்புரை: அடி-1-ல் ஆயன், நந்தகோபன், அவனுடைய தமரர் (சுற்றத்தார்) அழியா வகை செய்தான் - இந்திரன் பெய்வித்த கல்மழையால் அழியாதபடி வகை செய்து காத்தலின். பின்னொரு காலத்தில் இவ்வாறு செய்தவனாகிய திருமால். அன்று - முன் ஒரு காலத்தில் அமரர் ஆய் அழியமை யாய் - தேவர்கள் நலம் பெற்று, இராவணனால் அழியாமைப் பொருட்டு முன்னின்று. ‘அழியாமைக்கு’ என உருபு விரிக்க. (அவனை அழித்து) இருத்தினான்


1. காதை - 9, கானாத்திறம் உரைத்தது - 11.