| 722. | உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும், உமைகங்கை என்றிருவர் காணார்; - உமைகங்கை கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று கார்மிடற்றம் மேனிக் கினி. | | 66 |
| 723. | இனியவா காணீர்கள்; இப்பிறவி எல்லாம் இனியவா ஆகாமை யற்றும் - இனியவா(று) ஆக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை, ஆக்கை பலசெய்த அன்று. | | 67 |
722. குறிப்புரை: அடி-2-ல் உம்மை, “உமை” என இடைக் குறைந்து நின்றது. உம்மை - முன் ஒரு காலத்தில். இருவர், அயனும் மாலும். அடி-2-ல். கங்கு ஐ என்று - எல்லையுட்பட்ட நம்மைப் போலும் ஒருதலைவன்’ எனக் கருதினமையால் அடி -4-ல் கார்மிடல் தம் மேனிக்கு - கரியதும் வலியதும் ஆகிய தங்கள் உடம்பினிடத்தே கரியமேனி திருமாலுடையது. இனி - இனிக்கும் பொருளாக. உமை, தனிச் சீரில் உ - சிவனது. மை - யாவரும், ‘குற்றம்’ எனக் கருதுகின்ற. கம் கை - தலையை ஏந்திய கையையும் கார் மிடற்று அம் மேனிக் கதிர் முடியான் கண் மூன்றும் - நீல கண்டத்தையுடைய அழகிய திருமேனியையும், ஒளி பொருந்திய சடை முடியையும் உடைய அவனது மூன்று கண்களையும் அடி-1-ல் உமை, கங்கை என்று இருவர் உற்ற உணர்வும் - உமையும், கங்கையும் ஆகிய இருமகளிர் அவனையும் பொருந்தியுள்ள அன்பையும். காணார் - அறியாராயினர். ‘தம் மேனியில் அறியார் ஆயினர்’ என்றதனானே ‘வேற்றுரு எடுத்தும் கண்டிலர்’ என்பது குறிக்கப் பட்டது. ‘இனிப்பு’ என்பது இறுதிநிலை குன்றி முதனிலை மாத்திரமாய் நின்றது. 723. குறிப்புரை: “இனியவா காணீர்கள்” என்பதை இறுதிக்கண் கூட்டுக. ‘இப்பிறவியில்’ என ஏழாவது விரிக்க. இனி - இனிமேலும். அவா ஆகாமை - ஆசை வளராமல், ஆக்கை பல - பலவகையான பிறப்புக்களை, இனியவாறு செய்த - நல்ல வகையில் படைத்த - ஆக்கை பல செய்த அன்று அம்மானை இனியவா காணீர்கள் - உங்களுடைய உடம்பு வலுவாயிருந்து பல செயல்களை விரும்பியவாறே செய்த இளமைக் காலத்தில் பெருமானை நல்லவாறாக அறிந்து வழிபாடு செய்யாது விட்டீர்கள். ‘இன்று இரங்கி என் பயன்’ என்பது குறிப்பெச்சம். இப்பாட்டிற்கு. ‘உலகீர், நீவிர்’ என எழுவாய் வருவித்துக் கொள்க. ஆமாத்தூர், நடுநாட்டுத் தலம்.
|