பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை526

729.நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்;
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக்
கானப்பே ரீங்கங்கை சூடினீர்; கங்காளீர்;
கானப்பே ரீர்கங்கை யீர்.

73

730.ஈரம் உடைய இளமதியம் சூடினீர்;
ஈரம் உடைய சடையினீர்; - ஈர
வருங்காலம் ஆயினீர்; இவ்வுலகம் எல்லாம்
வருங்காலம் ஆயினீர்; வாழ்வு.

74


மாலையும், தலை மாலையும், நிலைத்து - நிலைக்கப் பெற்று. இறைவரது இயல்பை வருணித்தவாறு.

729. குறிப்புரை: ஈற்றடியில் உள்ள கானப்பேர் பாண்டிநாட்டுத் தலம்.. அதனடியாகப் பிறந்த, “கானப்பேரீர்” என்பதை முதலில் வைத்து, இவ்வுலகு அனைத்து நீரேயாய் நிலைத்து நின்றீர்’ எனவும், ‘நிலைத்த இவ்வுலகு அனைத்தும் நிலைத்து ஈர, நீரே கானப் பேர் ஈர்ங் கங்கை சூடினீர்; கங்காளீர்; கம் கையீர்’ எனவும் இயைத்து உரைக்க. இரண்டாம் அடி முதலில், ‘நிலைத்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அதனையடுத்து வந்த “உலகனைத்தும்” என்பதில், ‘உலகனைத் திலும்’ என ஏழாவது விரிக்க. தனிச் சீரில், நிலைத்து - தேங்கி. ஈர - அழிக்க. இவை கங்கையின் செயல். ‘ஈரக் கண்டு’ என ஒருசொல் வருவிக்க. கானம் - காடு; கற்பகச் சோலை. ‘அவ்விடத்து உள்ள பெரிய, குளிர்ந்த கங்கையை நீரே சூடினீர்’ என்க. கம் கையீர் - கபாலத்தைக் கையில் கொண்டுள்ளீர்.

730. குறிப்புரை: அடி-1-ல் ஈரம் - குளிர்ச்சி. அடி-2-ல் ஈர் அம் - குளிர்ந்த நீர் “சடையினீர்” என்பதை விளியாக்கி முதற்கண் கூட்டுக. ஈர வருங் காலம் ஆயினீர்” என்பதை இறுதியில் வைத்து உரைக்க. வரும் காலம் - தோன்றும் காலம். வாழ்வு - வாழ்தல்; நிலைத்தல். “வருங்காலம் ஆயினீர்” என்பதை இதன்பின்னும் கூட்டுக, “ஈர வருங் காலம்” என்பதில் ஈர்தல் - பிளத்தல்; அஃதாவது அழித்தல். “உயிர் ஈரும் வாள்”1 என்றார் திருவள்ளுவரும். ‘உலகத்திற்கு மூன்று காலமும் நீரேயாயினீர்’ - என்றபடி.

ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம் காலமே2 - என மணிவாசகரும் அருளிச் செய்தார்.


1.திருக்குறள்
2. திருவாசகம் - திருச்சதகம் - 43.