| 731. | வாழ்வார் மலரணைவார், வந்த அருநாகம் வாழ்வார் மலரணைவார்; வண்கங்கை - வாழ்வாய தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார் தீயாட வானாளு மாறு. | | 75 |
| 732. | மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல் மாறாத நீருடைய மாகாளர், - மாறா இடுங்கையர் சேரும் எழில்வாய், முன்னே இடுங்கையர் சேர்வாக, ஈ. | | 76 |
731. குறிப்புரை: வண் கங்கை வாழ்வாய தீ - வளவிய கங்கா தேவி பொருந்தும் இடமாகிய சடைமுடி. “தீ” என்பது உவம ஆகுபெயராய்த் தீப்போலும் சடைமுடியைக் குறித்தது. வான் ஆள்வான் - அண்டம் முழுதையும் ஆள்பவன்; சிவபெருமான், அவன் கழல்கள் சேராதார் நிலைமை பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறப்பட்டவை அவன் கழல்கள் சேர்ந்தாரது நிலைமையாயின. இதனை, “பிறவிக் பெருங்கடல் நீந்துவர்”1 என்னும் குறளில் ‘சேர்ந்தார்’ என்பது போலக் கொள்க. ‘அவன் கழல்களைச் சேர்ந்து, மலர் அணைவார் (பிரம தேவர் அப்பதவியில்) வாழ்வார்; மலர் (மலரின்கண் உள்ள திருமகளை) அணைவார் (விட்டுணு மூர்த்தி). வரு நாகம் (பாம்பணையில்) வாழ்வார். (இங்ஙனமாகச் சிலர்) அவன் கழல்களைச் சேராதாராய், தீ ஆட (உடம்பில் தீ மூண்டு எரிய) வான் ஆளும் ஆறு (கூற்றுவன் உலகை இடமாகக் கொள்ளும் வகை) இரங்கத் தக்கது என்க. ‘இரங்கத் தக்கது’ என்பது சொல்லெச்சம். 732. குறிப்புரை: ‘மாகாளம்’ என்னும் பெயரை உடைய தலங்கள் பல உள்ளன. மாகாளர் அத்தலங்களில் இருக்கும் இறைவர். தனிச் சீரில் மாறா - நீங்காத. அடி-3-ல் இடுங்கை - சோர்தல் வறுமையால் வாடுதல். வறுமையால் வாடுவோர் அறிந்து சேரும் எழிலவாய் (அழகுடையனவாய்) முன்னே இடும் கையர் - விரைவாகக் கொடுக்கும் கையை உடையவர்கள் சேர்வு - புகலிடம். ‘மாகாளரை வறியவர்க்கு இடும் கையை உடையவர்களது புகலிடமாக, அறிந்து, (நெஞ்சே, நீ) வறியவர்க்கு ஈதலைச் செய்’ - என முடிக்க. “இரப்பவர்க்கு ஈய வைத்தார்; அருளும் வைத்தார்”2 என அப்பர் அருளிச் செய்ததையும் நோக்குக. ஈதல் தொழில் நெஞ்சுக்கு இல்லையா யினும் ஈய நினைத்தலே ஈதலைச் செய்தற்கு முதல் ஆகலின் அதனைச் செய்தலாகக் கூறினார்.
1. குறள் - 10 2. திருமுறை - 4.38.10.
|