பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை536

753.எமையாள வந்தார் இடரான தீர,
எமையாளும் எம்மை இமையோர், - எமையாளும்
வீதிவிடங் கர்,விடம துண்டகண் டர்,விடையூர்
வீதிவிடங் கர்,விடையூர் தீ.

97

754.தீயான மேனியனே! செம்பவளக் குன்றமே!
தீயான சேராமற் செய்வானே! - தீயான
செம்பொற் புரிசைத் திருவாரூ ராய்என்னைச்
செம்பொற் சிவலோகஞ் சேர்.

98

755.சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே!
சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்;
ஒற்றியூ ரானே! உறவாரும் இல்லை,இனி
ஒற்றியூ ரானே உறும்.

99


அண்மையிலிருக்க இடம் ஈந்த இறைவர்’ என்க. அடி-4-ல் உள்ள தொடரை. ‘எமை ஈங்கு ஓய மலையார்’ என மாற்றி உரைத்துக் கொள்க. ‘ஓய’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஓய - மெலியும்படி மலையார் - வருத்தார்; ‘வருத்தத்தைத் தீர்ப்பார்’ என்பதாம். திருஈங்கோய் மலை, திருச்சிரா மலை இவை சோழ நாட்டுத் தலங்கள்.

753. குறிப்புரை: முன்னிரண்டு அடிகளில் மடக்கணி வாராது சொற்பொருட் பின்வருநிலையணியே வந்தது. ‘இடரான தீர எமை ஆள வந்தார்’ எனவும், ‘எம்மையும் எமையாளும் இமையோர்’ எனவும் மாற்றுக. வந்தார் - எம்பால் வந்தார். வினைப் பெயர். ‘எம்மையும்’ என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று எம்மையும் - எப்பிறப்பிலும். “வீதி” இரண்டில் முன்னது ஒளி, பின்னது தெரு “விடங்கர்” இரண்டில் முன்னது அழகர்; பின்னது சுயம்பு மூர்த்தி. “விடை” இரண்டில் முன்னது இடபம்; பின்னது விடுத்தல்; ஏவுதல் அது ‘ஏவப்படும் பொருள்’ எனப் பொருள் தந்தது. “ஊர்” இரண்டில், முன்னது ஏறிச் செலுத்துதல்; வினைத்தொகையாய் வந்தது. பின்னது நகரம்; திரிபுரம்.

754. குறிப்புரை: “தீ” மூன்றில் முதலது நெருப்பு; இடையது தீமை; இறுதியது ஒளி. புரிசை - மதில். ஈற்றடியில் “பொன்” என்றது பொருளை, செம்பொருள் - மெய்ப்பொருள்; அஃது ‘அழியாப் பொருள்’ எனப் பொருள் தந்தது.

755. குறிப்புரை: முன்னிரண்டடிகளில் சொற்பொருட் பின்வருநிலை யணியே வந்தது. பின் வந்த “சிதையாமல்” என்பது, ‘சிதையாமைப் பொருட்டு’. “ஒற்றியூர்” இரண்டில் முன்னது