வெண்பா 767. | உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத வளரொளி தேய்ந்து உள்வளைந்த(து) ஒக்கும் - கிளரொளிய பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார் கோதைப் பிறையின் கொழுந்து. | | 11 |
ஞானேச்சரக் கிரியைகளாகிய சத்திகள் ஆதல் பற்றி, “மரகதக் கபாடத்து அயில் வழங்கு குடுமி” என்றார். “ஆணவமாகும் கபாடமும்”1 எனப் பிற்காலத்தில் சிவப் பிரகாச அடிகளும் கூறினார். “நின் அணங்கு” என்றது கங்கா தேவியை. துயில் எடுத்தல் - எழுப்புதல். ‘எழுப்புதல் பிறையை’ என்க. பிறையைக் கங்கை எழுப்புதலாவது மிதக்கச் செய்தல். ‘மிதக்கச் செய்யும்பொழுது சந்திரனது நிலா ஒளி எங்கும் விளங்குதல் வேண்டுமன்றோ? அங்ஙனம் விளங்க யாம் ஒருபோதும் கண்டதிலம் என்க பிணையல் - மாலை “நிலாப் பிணையல்” என்றது உருவகம். ‘இனி, நிலாவாகிய அப் பிணையல் மூவா எஃகமும் (கெடாத சூலப்படையோடு) மூணும் - மாறுபட்டுத் தோன்றுதலும் செய்யும். “இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினை”2 - என்றபடி சூலம் கருநிறமாய் இருத்தலின் நிலவு அதனோடு மாறுபடுவதாயிற்று. ஓவாது பயிற்றும் - உனது சடையில் உள்ள பிறையை இடைவிடாது கண்டு கொண்டிருக்கின்ற. உலகம் மால் உளது - உலகம் திகைப்பை உடையதாகின்றது. ‘பிறை என்றும் பிறையாகியே உள்ளதன்றி, வளரவில்லையோ என்க’ என்றபடி. “வளருமோ பிள்ளை மதி” - என அம்மை திருவந்தாதியிலும்3 கூறப்பட்டது. 767. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. ‘பேதைப்பிணா. கருங்கட் பிணா’ எனத் தனித்தனி இயைக்க. பேதை - ‘மடம்’ என்னும் பெண்மைக் குணம். பிணா - பெண்மான். அஃது உவமையாகு பெயராய், உமா தேவியைக் குறித்தது. மானினது நோக்குப்போலும் நோக்குடைமை பற்றி மகளிரை ‘மான்’ என்றல் வழக்கு. கோதைப் பிறை - கொன்றை மாலையை அடுத்துள்ள பிறை. ‘பிறையாகிய கொழுந்து’ என்க. இன், வேண்டாவழிச் சாரியை. உளர் ஒளி - வீசுகின்ற ஒளி. ‘ஒளிய திரைகள்’ என இயையும். இயல்பாகவே குறைந்த களையினையும், உள் வளைவையும் உடைய பிறைக்கு அவற்றைச் செயற்கை போலக் கூறியது தற்குறிப்பேற்றம்.
1. நால்வர் நான்மணிமாலை - 14. 2. திருமுறை - 7.40.3. 3. வெண்பா - 36.
|