பக்கம் எண் :

557மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அதிரா அடிகள்
அருளிச் செய்த

25. மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

787.ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர்
மும்முகச் செந்நுதி நாலிணர் வெள்நிணக்
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்
மதலை மாமதந் துவன்றிய கதனுடைக்
கடதடக் கபோலத் தோரிட மருப்பின்
கரண்டக உதரத்து முரண்தரு குழவிதன்
சேவடி யுகளம் அல்லது
யாவையும் இலம்இனி இருநிலத் திடையே.

1


787. குறிப்புரை: இதன் முதல் மூன்று அடிகளும்சிவபெருமானைக் குறித்தன. “இருங்குறும் பைம்புக.... கழுப்படை” என்னும் தொடர் சிவபெருமான் ஏந்தியுள்ள சூலத்தைக் குறித்தது. இருமை - கருமை. அஃது மையீறு இன்றி நின்றமையின் மெல்லினம் மிகுந்தது. குறுமை - சிறுமை. பசுமை - ஈரம். அது பகைவர் உடலில் பாய்ந்து புலராமையால் ஆயிற்று. புகர் - அழகு. நுதி - முனை. அஃது உதிரத்தால் சிவந்து நின்றது. நாலுதல் - தொங்குதல். நுதியிலே நாறுகின்ற. இணர் - கொத்தாகிய குடல் என்க. நிணம் - கொழுப்பு. குடல் பகைவருடையன. கமழும் - நாறுகின்ற. இவ்வளவும் சூலத்திற்கு அடை. மதலை - மகன். துவன்றுதல் - நெருங்குதல். அஃது இங்கே மிகுந்த பாய்தலைக் குறித்தது. கதன் - கதம், கோபம். கடம் - மதநீர்; தட - பெரிய, கபோலம் - கன்னம். வல மருப்புக் கயமுகாசுரனை அழிக்க ஒடிக்கப்பட்டது ஆகலின், “இட மருப்பின்” என்றார். கரண்டக உதரம் - கூடை போலும் வயிறு. ‘சிற்றுண்டிகள் பலவற்றால் நிரம்பியது’ என்றபடி. ‘கதனுடைக் குழவி, கபோலக் குழவி, மருப்பிற்குழவி, உதரத்துக் குழவி என முடிக்க. முரண் - வலிமை. யுகளம் - இணை. யாவையும் - அனைத்துப் பொருள்களின்மேல் உள்ள பற்றுக்களும். ஆகுபெயர். இதன்கண் ஒன்று முதல் நால் அளவான எண்ணலங்காரம் வந்தது. “செந்நுதி வெள்நிணம்” முரண் தொடை.