பக்கம் எண் :

563மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை

வெண்பா

797.மலைசூழ்ந் திழிகின்ற மாசுணம்பொற் பாறைத்
தலைசூழ்ந்து தானினைப்ப தொக்கும் - கலைசூழ்
திரண்டகங்கொள் பேரறிவன் திண்வயிற்றின் உம்பர்க்
கரண்டகங்கொள் காலுயிர்க்குங் கை.

11

கட்டளைக் கலித்துறை

798.காலது கையது கண்ணது தீயது கார்மதநீர்
மேலது கீழது நூலது வெற்பது பொற்பமைதீம்
பாலது தேனது தானது மென்மொழிப் பாவைமுப்பூண்
வேலது வாளது நான்மறைக் கீன்ற விடுசுடர்க்கே.

12


797. குறிப்புரை: தனிச்சீர் முதலாகத் தொடங்கியுரைக்க. கலை - உடை. கலை சூழ் திரண்டு அகங்கொள் பேரறிவன் - நூல்களின் ஆய்வுகள் யாவும் ஒருங்குகூடி தங்கள் அகத்தும் கொள்கின்ற. பெரிய அறிவு வடிவாய் உள்ளவன். உம்பர் - மேலே; உயரத்தில், கால் உயிர்க்கும் கை - மூச்சுக் காற்றை வெளியிடும் கை; தும்பிக்கை. கரண்டகம் கொள் கால் - கூடை நிரம்பத்தக்க காற்று. ‘கை மாசுணம் இணைப்பது ஒக்கும்’ - என முடிக்க. மலை சூழ்ந்து இழிகின்ற மாசுணம் - மலையைச் சுற்றிக்கொண்டு கீழ்நோக்கியிறங்கம் பாம்பு. பொற் பாறைத் தலை - பொற் குன்றின் உச்சி. தான், அசை, இளைப்பது - இளைப்பாறுவது. பெருமூச்சு விடுவது.

798. குறிப்புரை: நான் மறைக்கின்ற - நான் உள்ளத்திலே பொதிந்து வைக்கின்ற சுடர், பிள்ளையார். இதனுள் “கையது, நூலது, வெற்பது, வேலது வாளது” என்பவற்றில் உள்ள “அது” என்பன எல்லாம் பகுதிப் பொருள் விகுதிகள். ஏனைய “காலது” முதலியன பலவும் ‘அதனை உடையது’ என்னும் குறிப்பு முற்று வினையாலணையும் பெயர்கள். எனவே, “கை காலது (தும்பிக்கை காற்றை இடையது). கண் தீயது (தீயை உடையது) மதநீர் மேலது. நூல் (முந்நூல்) அதன் கீழது. வெற்பு (மலைபோலும் திருமேனி) “பாவையது” என இதனிடத்தும் துவ் விகுதி விரிக்க. பாவையது - பெண்ணை (வல்லபையை) உடையது. “பாலது, தேனது” என்பவற்றில் உள்ள ‘அது’ என்பனவும் பகுதிப் பொருள் விகுதிகளே. எனவே, ‘அது பால்தான், தேன்தான் என்னும் மெல்லிய மொழியையுடைய பாவை’ என்பதாம். ‘வாள் முப்பூண் வேல் (சூலம்)’ என்க.