அகவற்பா 799. | சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல் சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக் கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி அள்ளல் தீஞ்சுவை அருந்திய வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே. | | 13 |
வெண்பா 800. | இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள் திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு தேனாட வண்டாடச் செங்கீரை ஆடின்றே வானாடன் பெற்ற வரை. | | 14 |
799. குறிப்புரை: நெடுவேற் சேய், முருகன். அவன் மூன்று உலகங்களையும் சுற்றிவருவதற்குமுன் விநாயகர் தம் தாய் தந்தையரை வலம் வந்து மாங்கனியைப் பெற்று உண்ட வரலாறு நன்கறியப்பட்டது. படலை - மாலை. வளாய் - சுற்றி வந்து. அள்ளல் - சாறு. 800. குறிப்புரை: ஈற்றடியை முதலிற் கொள்க. வானாடன் - சிதாகாசத்தில் உள்ளவன்; சிவ பெருமான். வரை - மலை போலும் தோற்றத்தையுடைய பிள்ளை. “திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்” எனத் தொடங்கும் கந்த புராணக் காப்புச் செய்யுளால் விநாயகரது பேருருவ நிலையை உணர்க. ‘இவ் வலயம்’ என இயையும். வலயம் - பூமியை வளைந்துள்ள கடல். கயம்கொள் - ஆழத்தைக் கொண்ட மூ வலயம். மூத்த (பழமையான) வலயம்; வினைத்தொகை. ஏழ் வரைகள், ஏழு தீவுகளிலும் உள்ள மலைகள். திக் கயங்கள் - திசை யானைகள். ‘தட வரைகளும், திக் கயங்களும் பேர்ந்து செங்கீரை ஆடும்படி வானாடன் பெற்ற வரை செங்கீரை யாடின்று’ என இயைத்து முடிக்க. “செங்கீரை யாடின்று” என்பதை மேல் “ஊசலாடின்று”1 என்றது போலக் கொள்க. மேல்2 சப்பாணி கொட்டற் சிறப்புக் கூறி, இங்குச் செங்கீரை யாடற் சிறப்புக் கூறினார். தேன் - வண்டுகளில் ஒருவகை. தேனும், வண்டும் புகுந்து ஆடுதல் தான் அணிந்த கொன்றை மாலையில் என்க.
1. பாட்டு - 791. 2. பாட்டு - 788
|