உணர்வே செம்மை யுணர்வு” என்றமையால்,‘ தம்மை நினைந்து இறைவனை மறக்கும் உணர்வு கோட்டம் உடைய உணர்வு’ என்பதும், ‘அவர் மனத்தில் இறைவன் நிற்றல் இல்லை’ என்பதும் போந்தன. சிறைவான் புனல்தில்லைச்சிற்றம் பலத்தும் என் | சிந்தையுள்ளும் | உறைவான்1 |
என்றவாறே, “செம்மை மனத்தினும், தில்லை மன்றினும் - நடம் ஆடும் அம்பலவாண” - என்றார். தாது- மகரந்தம். தார் - மாலை. தழங்கும் - ஒலிக்கின்ற. தமருகம் - உடுக்கை. சிவபெருமானது ஆணை, ‘விரையாக்கலி’ எனப்படும். ‘இரு ஆயிரம் வகுத்த மருப்பு’ என்க. கயிலையில் இருக்கும் சிவ பெருமானது யானை ‘அயிராவணம்’ என்னும் பெயரையும். இரண்டாயிரம் தந்தங்களையும் வெள்ளை நிறத்தையும் உடையது. வைதிகப் புரவி - வேதமாகிய குதிரை. இவைகளே திரிபுரத்தேர்மேல் சென்ற காலத்தில் அத்தேரையிழுத்தன.தார் - மாலை. மாலை, கொடி, பறை, யாறு, ஆணை, யானை, குதிரை, நாடு, மலை, ஊர் - இப்பத்தும் “தசாங்கம்” எனப் பெயர்பெறும். தலைன் ஒருவனைப் புகழ்வோர் அவனுக்கு உரிய இப்பத்தினையும் புகழ்தல் மரபு. இதனைத் திரு வாசகத்துட் காண்க. ‘அமரருக்கு முன்னே புகுந்து’ என்க. “நறுமுறு தேவர் கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்லது எடுக்க லொட்டோம்”2 என்னும் திருவாசகத்தைக் காண்க. ‘அறுகு எடுத்தல்’ என்பதுமங்கலம் கொள்வார்க்கு அறுகம்புல் கொண்டு செய்யப்படும் ஒரு சடங்கு. அஃது இறை வழிபாட்டின் பகுதியாய் வழங்கும். அருக்கியம் முதலியன கொடுத்தலும் இவ்வாறு அமையலாம். மேற்குறித்த அத்திரு வாசகத்தில், “அறுகெடுப்பார் அயனும், அரியும் - அன்றி மற்று இந்திரனோடு அமரர்”என வந்தமை காண்க. தமர் - சுற்றத்தார்; அடியவர். மங்கல வினை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தல், வரிசையளித்தல் முதலியன செய்தோரது பெயர்களை ஏட்டில் முறையாக எழுதிக்கொண்டு பின்பு அவர்கட்கு மங்கலம்பெற்றோர் சிறப்புச் செய்தல் வழக்கம். அம்முறை பற்றி, ‘யான், இப்பிறப்பில் இன்று உள்ளது போல அன்று இருந்திலேன் ஆயினும், ஏதோ ஒரு வகைப் பிறப்பில் அன்று நின் திருமண நிகழ்ச்சியில் இருந்துதான் இருப்பேன்; ஆகையால், என்றும் என்னை எவ்வகையிலும் அறிபவனாகிய நீ நின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமர் பெயர்களை எழுதிய வரி நெடும் புத்தகத்து என் பெயரையும் எழுதிக் கொள்ளல் வேண்டும்; ஏனெனில், நினது அருளாணை தரப்படுமாயின் சிறிய அணுவும் பெரிய
1. திருக்கோவையார் - 20. 2. திருப்பொற்சுண்ணம் - 5.
|