பக்கம் எண் :

577கோயில் நான்மணிமாலை

கட்டளைக் கலித்துறை

819.

நானே பிறந்த பயன்படைத் தேன்;அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.

10

சந்த விருத்தம்

820.

சந்து புனைய வெதும்பி, மலரணை

தங்க வெருவி, இலங்கு கலையொடு

சங்கு கழல, நிறைந்த அயலவர்

தஞ்சொல் நலிய மெலிந்து, கிளியொடு

பந்து கழல்கள் மறந்து தளிர்புரை

பண்டை நிறமும் இழந்து, நிறையொடு

பண்பு தவிர, அனங்கன் அவனொடு

நண்பு பெருக விளைந்த இனையன;

நந்தி முழவு தழங்க, மலைபெறு

நங்கை மகிழ, அணிந்த அரவுகள்

நஞ்சு பிழிய முரன்று, முயலகன்

நைந்து நரல, அலைந்த பகிரதி

அந்தி மதியொ டணிந்து திலைநகர்

அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில்

அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்

அன்று முதல் எதிர்இன்று வரையுமே.

11


என வினை முடிக்க. இதனால் திருநடனத்தின் ஆனந்தத்தது சிறப்புக் கூறப்பட்டது.

819. குறிப்புரை: “நானே பிறந்தபயன் படைத்தேன்” என்பதை இறுதிக்கண் கூட்டியுரைக்க. ‘எம் கோனே’ என்று சொல்லித் துதிப்பவர் அயனும். மாலும், என - என்று துதிக்கும் படி. “தேன்” என்றது சிவபெருமானை. “தேனே” என்னும் பிரிநிலை ஏகாரம்,‘யான் வேண்டாமல் இருக்கவும் தானாகவே திருவுள்ளம் செய்தான்’ எனப் பொருள் தந்தது. ‘தானே திருவுள்ளம் செய்து, தானே புகுந்தான்’ என்க.

820. குறிப்புரை: “நந்தி முழவு தழங்க” என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. தழங்க- ஒலிக்க. ‘நஞ்சு பிழிய முரன்று’ என இயைத்து, “முரன்று”என்பதையும் ஏனையவற்றோடு இயைய, ‘முரல’ எனத் திரிக்க. முரல - மூச்சொலி செய்ய. நரல - ஓலம் இட. ‘முழவு