| இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே! | | 12 |
“கடையுகஞ் சென்ற” என்பது முதல் “குறைவின்றே”என்பது முடிய உள்ள பகுதி திருமாலின் சிறப்புக் கூறியது.“கடையுகம்” என்பதை ‘யுகக் கடை’ என மாற்றிக்கொள்க. சேல் - மீன். “செஞ்சேல்” என்பதில் செம்மை செப்பத்தைக் குறித்தது. ‘ஆகியபின்’ என்பது ‘ஆகி’எனத் திரிந்து நின்றது. ‘ஏழும்’ என்னும் முற்றும்மை தொகுத்தாலாயிற்று. ஏகாரம் தேற்றம். “பட்டது”என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது. ‘படுத்தது’என்பது விகுதிகுன்றி, “பட்டது” என நின்றது. ஓர் உகமுடிவில் ‘சோமுகன்’ என்னும் அசுரன் வேதத்தைக் கவர்ந்து கொண்டு கடலுள் ஒளிந்து கொள்ளத் திருமால்அவனை அழித்தற்குக் கொண்ட அவதாரமாகிய மச்சத்தின் வாய்க்குள் ஏழு கடல்களும் அடங்கிவிட்டன’ என அதன்பெருமை கூறியவாறு. இதன் பின் உலகம் உண்டதும், மூவுலகையும் ஈரடியாலே அளந்ததும் ஆகிய திருமால் பெருமையையே கூறினார். ‘ஒருநாள் உண்டதும் பௌவத்தோடு உலகு குழைத்து’ என்க. ‘இத்தகைய பெருமைகளை உடையனாயினும் பிறத்தல், இறத்தல் முதலிய குறைகளையும் அவன் உடையனாயினும் அவற்றைப் பலர் அறியார்’ என்றற்கு “உரைப்போர்க்கல்லது அவன் குறைவு இன்றே” என்றார். உரைப்போர் - உணர்ந்து சொல்வோர். கேழல் - பன்றி.கிளைத்தல் - தோண்டுதல். நிகிலம், அகிலம் - எஞ்சுதல்இன்மை. சரம் - இயங்கியற் பொருள, அசரம் - நிலையியற்பொருள், பொன்னிறக் கடவுள் - இரணியகருப்பன்; பிரமதேவன்; இங்குக் கூறிய பெருமைகளை யெல்லாம் உடைய பெரிய தேவர்களாகிய மாலும், அயனும் வேற்றுருக் கொண்டு ஊழிஊழி தேடியும் அறியப்படாத, எல்லை காண்பரிய அடியும்,முடியும் தில்லையில் ஒரு சிறிய மன்றினுள் ஆடுதல்எனக்கு அதிசயத்தை விளைக்கின்றது. ஆயினும் அதிசயம்விளைக்கவும் இல்லை. ஏனெனில், அம்மன்றினும் மிகச்சிறியதும், ஆயினும் அசுத்தப் பொருள்களை மிக உடையதும்,அதனோடு கூட, ஒருவர் அல்லர்; ஐவர் கள்வரால்,ஒருவன் குயவன் சுழற்றுகின்ற அச்சக்கரத்தின் வேகம்போலஎண்மடங்கு வேகத்துடன் சுழலும்படி. சுழற்றச்சுழல்வதுமாகிய என் நெஞ்சினுள்ளே நுழைந்து உனது உறுப்புக்களெல்லாம்நன்கு விளங்க ஆடுகின்றாய்; (இது அதிசயம் விளையாமைக்குக் காரணம், இரண்டும் மிக மிக அதிசயமேயாகலின் அதிசயம்விளையாமற்போகவும் இல்லை.) இதனாலன்றோ உன்னைப்“பெரியதினும் பெரியை” என்றும், “சிறியதினும்சிறியை” என்றும் வேதங்களும் சொல்கின்றன.
|