சந்த விருத்தம் 848. | தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள் துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு | | நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு நரக உடற்கன்பு கொண்டலை வேனினி | | மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனாரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை | | திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே. | | 39 |
848.குறிப்புரை: “(நான்) உடற்குஅன்பு செய்து அலைவேன்; (இதனை விடுத்துத்) தில்லையம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தலமே இனி (எனக்குச்)சதுராவது” என முடிவு கொள்க. அங்கம் - உறுப்புக்கள்.தொடர நரைத்து - நாள்தோறும் தொடர்ந்து நரை தோன்றப்பெற்றுமுன்பு - இளமைக் காலத்தில் ஒன்றும் - (அங்கம்) ஒன்றேனும்.ஒன்றியிடாது - வசப்படாது. “தளிவு தலைக்கொண்டு”என்பதை, “கண்டு” என்பதன்பின் கூட்டுக. ‘வெறுப்பை மேற் கொண்டு’ என்பது இதன் பொருள். புன்புலைவாரிகள் - அற்பமான இழிந்த நிர்கள்; கோழை, சிறுநீர்முதலியன. நடை கெட - நடத்தல் இல்லாதொழிய. (இடம்பெயராது கிடந்து என்றபடி) கொண்ட பெண்டிர் - மனைவியர்.‘தொல்லை பொறாது’ என்க. நடலை - துன்பம். விழும்உடல் - இறுதியில் வீழ்ந்தொழிகின்ற உடம்பு. நரகஉடல் - இழிவாலும், துன்பத் தாலும் நரகம்போல்வதாகியஉடம்பு. மிடல் - வலிமை. விரகு - திறமை. ‘அவன் பொன்றியிடா வகை’ என்க. திடம் - உறுதி ‘திடமாக’என ஆக்கம் வருவிக்க. அருள்காரணமாகத் தரப்பட்டவரத்தினது திடம். அதற்குக் காரணமான அருள்மேல் ஏற்றப்பட்டது.ஊறிய - உள்ளுள் சுரக்கின்ற. “சுடர், சுவை” என் பனபின் வந்த “சிவன்” என்னும் ஒரு பொருள்மேல் வந்த பெயர்கள். நீடிய - நிலை பெற்ற. அம்பலம்’ என்க.சதுர் - திறமை.
|