பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை614

பாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி(சு)
எந்தைநீ இருக்க இட்டனன் இந்த
நெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்

15

அடையப் பரந்த ஆதிவெள் ளத்து

நுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப
வரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப
மாலும் பிரமனும் முதலிய வானவர்
காலம் இதுவெனக் கலங்கா நின்றுழி

20

மற்றவர் உய்யப் பற்றிய புணையாய்

மிகநனி மிதந்த புகலி நாயக
அருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமயக்

25

கொழுந்தையும் உடனே கொண்டிங்(கு)

எழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே.

4


பெறப்பட்டது. மெய் - வாய்மை. “சிந்தை”இரண்டில் முன்னது ‘சித்தம்’ என்னும் அந்தக் கரணம். பின்னது இருதயம். தவிசு - ஆசனம். அடு கதிர் -வெங்கதிர்; ஞாயிறு. அடைய - இடைவெளியின்றி ஒன்றாகும்படி. ஆதி வெள்ளம் - முன்பு ஒரு பிரளயத்தில் தோன்றியவெள்ளம். ‘இரு சுடர்களும் அந்த வெள்ளத்தில் நுரைபோல மிதக்க’ என்க. வரை பறித்து இயங்கும்மாருதம் கடுப்ப - மலைகளை யெல்லாம் புரட்டி வீசும்காற்று கடுவேகமாய் அடிக்க. காலம் - முடிவு காலம். மற்று,அசை. புணையாய் - புணைபோல ‘வானவர் பலரும் திருக்கழுமலப்பெருமானைச் சார்ந்து பிழைத்திருந்தனர்’ என்பதாம். விடங்கன் - அழகன். பிரளய அழகன், தோணியப்பன்.“உடனே கொண்டு” என்பதில் ஏகாரத்தை மாற்றி, ‘உடன்கொண்டே’ என உரைக்க. ‘என் சித்தம் முன்பு பாழ்அறையாய்க் கிடந்தது போல இல்லாமல் பள்ளியறையாகும்படி செய்துள்ளேன் ஆதலின் அதில் நீ உன் துணைவியுடன்வந்து இருக்கத் தகும்’ என்பதாம். பாழ் அறையாய்க்கிடந்தது. அஞ்ஞான நிலையில். பள்ளியறை யானது மெய்ஞ்ஞானநிலையில். எனவே, இறைவன் அஞ்ஞானிகளது உள்ளத்தில்புகாது. மெய்ஞ்ஞானிகளது உள்ளத்தில் புகுதல் கூறப்பட்டதாம். ஈற்றயலின் அயலடியும் முச்சீராய் வந்தமையின் இதுவும் இணைக் குறளாசிரியப்பா.