விழுப்பம் - சில காரணங்களால் தமக்கு அமைந்த பெருமை. குலம் - குடிப் பிறப்பு. ஒழுக்கம் - முன்னோர் ஒழுகி வந்த நல்லொழுக்கம். கல்வி - பெற்றோராலும், ஆசிரியாராலும் வற்புறுத்திக் கற்பிக்கப்பட்டகல்வி. இவைகளைப் பாராது அஃதாவது, ‘இவை வீணாவதை எண்ணாமல் நன்மூதாளரைஉறாப்பேசி’ என்க. உறாப்பேசுதல் - அன்பால் உளம் பொருந்துதல் இன்றிப்பேசுதல். எனவே கடிந்து பேசுதலாம். கூவுதல் - அழைத்தல்.“கூய்” என்பதை, ‘கூவ’ எனத் திரிக்க. ‘தொகுதியைப் பேசுதல் போலப் பேசி’ என்பதாம். இன், உவம உருபு. புன்மை - கீழான செய்திகள். தன் புல்லர் - தனக்கு நண்பாராய் உள்ள அற்பர். ‘அற்பர்’ என்றதனால், அத்தகையோரே அவருக்கு நண்பராதல் குறிக்கப்பட்டது. தேறி - தெளிந்து; கைவிடாது காப்பாற்றுவான்’ எனநம்பி. ‘அந்நிலையில்’ என உருபு விரித்து, அதன்பின்“கொண்டோள் ஒருத்தி” என்பதைக் கூட்டுக. கொண்டோள்- கொள்ளப்பட்டோள். ‘ஆயினும் அவள்பால் மேவுழி மேவல் செய்யாது’ என்க. மேவுழி - செல்ல வேண்டிய காலத்தில். உண்டி வேட்டு இருத்தற்கு, ‘அவள்’ என்னும் எழுவாய் வருவிக்க. எள்ளைக் கொடுத்து, அதன் அளவுக்கு எண்ணெய்வாணிபரிடம் எண்ணெய் பெறுதல் அக்காலத்து வழக்கம்.அவ்வாணிபர் அந்த எள்ளின் அளவுக்குச் சிறிது மிகுதியாகவும் எண்ணெய் கொடுக்க உடம்படார். தள்ளாது - பொருள்கொடுப்பின் யாரையும் விலக்காமல். ‘அன்பு உண்டாகக்காரணம் இல்லையாயினும், அருளேனும் உண்டாகப் பெறவரோ எனின் அஃதும் இல்லை’ என்றற்கு விலை மாதரை “அருள் இல் மடந்தையர்” என்றார். ஆற்றல் - ஆற்றுதல்;பொறுத்தல். பொறுக்கப்படுவது ஆசையின் வேகம்.இதனை, “கேட்டு” என்பதன் பின்னர்க் கூட்டுக. வேற்றோர் - அயலார். பிழை வழிபாராது - குற்றமான நெறியாதலை நோக்காமல். நச்சி - விரும்பி நல்கூர் - வறுமையுற்ற. விச்சையின்படைத்த - அவர்களது அறிவில் பதியும்படி தோற்றுவித்த, காட்சி - மெய்ப்பாடுகள் தாளின் ஆற்றல் - நடப்பனவாகியகால்களின் உரம். கேள் - சுற்றம், இகம் - இம்மை. அது இம்மைக்கண் எய்தற் பாலதாகிய புகழைக் குறித்தது. பரம் - மறுமை. பயம் இன்று - பயன் இல்லாமல். பட்டிமை - கட்டுப்பாடின்றி வேண்டியவாறே ஒழுகும் தன்மை. பயிற்றி - பலகாலும் மேற்கொண்டு. “ஒருவர்” என்பது உன்னுவார் கருத்துப் பற்றி வந்ததாகலின் அது முன்னர்ப் போந்த ஒருமைச் சொற்களோடு இயையாது வேறு நின்றது. நனை - அரும்பு. உற்பலம் - நீலோற்பலம், பாசடை - பசுமையான இலை. பார்ப்பு - குஞ்சு. “மருதம்” இரண்டில் முன்னது வயல், நிலம். வைப்பு - சேம நிதி. முத்தித் தாள - முத்தியாகிய திருவடியை உடையவனே, மூவா - அழியாத. “மருதவாண, சுருதி நாயக, முத்தித் தாள, முதல்வ “என்பவற்றை முதற்கண் கொண்டு உரைக்க. ஒக்கல் - சுற்றம். திரு - செல்வம் “மறுத்தனர்” என்பது முற்றெச்சமாய் நின்றது.சின்னம் - சிறுமை. சீரை - மரவுரி.
|