| போந்தெரிபாய்ந்தன்ன புரிசடையாய், பொங்கிரவில் எந்தெரிபாய்ந் தாடும் இடம். | | 70 |
| 114. | இடப்பால, வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே; முக்கண்ணா, கண். | | 71 |
பேராசையாய் (உள்ளது) தவிராது’ என்க. அமைக்கவே போந்த எரி - சிலர் செயற்கையாக அமைக்க அதனாலே உண்டான எரி, பாய்தல் பரத்தல். ‘இயற்கையேயாயினும் செயற்கைபோல அத்தனை அமைப்பாய் உள்ளது’ என்பதாம். ‘போந்த’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொங்குதல் - இருள் மிகுதல். ஏந்து எரி - ஓங்கி எரியும் எரி. “இதுவோ” என்னும் ஓகாரம் சிறப்பு. “தவிராது” என்றது. ‘தவிர்க்கினும் தவிராது’ என்றபடி. “காட்டுதியோ” என்பதில் ஓகாரம் ஐயப் பொருட்டு ஆகலின், ‘மாட்டாயோ’ என்பதும் கொள்ளப்படும். ‘சிவன் இரவில் எரியாடும் இடம் இந்தச் சுடுகாடாயின், யாவரும் அதனை எளிதிற் சென்று கண்டுவிடலாம்; ‘அவன் காட்ட வேண்டும்’ என்பதில்லை. ஆகவே, ‘அதனைக்காண வேண்டும்’ என்று ஓர் ஆசை தோன்றுதலும், அதனை நிரப்ப முடியா திருத்தலும் நிகழா. அதனால், இரவாவது முற்றழிப்புக் காலமும், எரியாடும் இடமாவது சூக்குமமாகிய காரண நிலையுமாம் - என்பது கருத்து. 114. அ. சொ. பொ.: “முக்கண்ணாய்” என்பதை முதலிற் கொண்டுரைக்க. இடப்பால் - ‘இடப் பக்கத்தில் உள்ள மதி’ என்க. ஓர் மடப்பாவை, கங்கை, கங்கை தலையிலே யிருப்பதால், மதியை (பிறையை) அவள் பக்கத்தில்தான் வைக்க வேண்டியுள்ளது. அஃது உண்மைதான்; ஆயினும் அதனால் நீ அழகாகச் சூடிய பிறையில் உன் இடப் பாகத்தில் உள்ள தேவிக்குத் தொடர்பில்லாமல், அவள் மாற்றாட்கன்றோ தொடர்புடையதாகின்றது? கண் கண்டாயே - இதனை நீ உன் கண்ணால் கண்டு கொண்டு தானே இருக்கின்றாய். (‘இதற்கு என் செய்தாய்’ என்பது இசை யெச்சம். ‘நீ, இடப் பாகத்தில் ஒருத்தியிருக்க, மற்றொருத்தியைத் தலையில் வைத்தது பிழை’ என்பது குறிப்பு.) இதுவும் நிந்தாத் துதி. “கண்டிலம் காண்” என்பதில் காண். முன்னிலையசை. கண் கண்டாயே’ என மாற்றி, ‘கண்ணால்’ என உருபு விரிக்க. இனி, ஈற்றில், “கண்” என்பதை, ‘காண்’ எனப் பாடம் ஓதி, ‘கண்டாயே; இதற்கு ஏதேனும் ஒரு வழியைக் காண்’ என உரைப்பினும் ஆம்.
|