பக்கம் எண் :

65அற்புதத் திருவந்தாதி

115.

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்; - துண்டஞ்சேர்
விண்ணாளுந் திங்களாய், மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா, ஈதென் கருத்து. 

72

 

116.

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன்; - பருத்தரங்கம்
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீவிரும்பி
உள்ளமே எப்போதும் ஓது. 

73

 

117.

ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால்; - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம். 

74


115. அ. சொ. பொ.: ‘நின்னைக் கண்டு நினக்குப் பணி செய்யேனேல்’ என்க. கைப் பணி - கையால் செய்யும் தொண்டு. சிறப்புடைமை பற்றி இதனையே எடுத்தோதினார். ஆகவே, மனத் தொண்டும், வாய்த் தொண்டும் சொல்லாமே அடங்கின. “செய்யேனேல்” என்றது, ‘செய்யும் வாய்ப்பைப் பெறேனாயின்’ என்றபடி. அண்டம் - வானுலக ஆட்சி. இதனைக் கூறவே, மண்ணுலகும் ஆட்சியும் அடங்கிற்று, திங்களாய் - திங்களை அணிந்தவனே. இதனையும், “கண்ணாளா” என்பதையும் முதலிற் கொள்க. ‘மிக்க’ என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. “கண்” என்றது, கண்போலும் தன்மையை. அஃதாவது நன்னெறி தீநெறிகளை விளக்கும் தன்மை. ஆளன் உடையவன். கைப்பணி பிறப்பை அறுப்பதும், மண்ணுலக விண்ணுலக ஆட்சிகள் பிறப்பை மிகுவிப்பனவும் ஆதலின் அவை முறையே விரும்பப்படுவதும், வெறுக்கப்படுவனவும் ஆயின.

116. அ. சொ. பொ.: “உள்ளமே” என்பதை, “பருத் தரங்கம்” என்பதற்கு முன்னே கூட்டி, அது முதலாக உரைக்க. தரங்கம் - அலை. வெள்ள நீர் - மிக்க நீர். வாயின் தொழிலாகிய ஓதுதலை நெஞ்சிற்கு ஏற்றியது இலக்கணை. நெஞ்சிற்குக் கருத்து உள்ளதுபோலக் கூறியதும் அது. திருத்தலாம் - நிரப்பலாம். சிக்கென உறுதியாக.

117. அ. சொ. பொ.: ஓதம் - அலை. “எத்தனை” என்பது ஆகுபெயராய் அவற்றின் நீரைக் குறித்தது. அட்டுதல் - சேர்த்தல். ‘அட்டவும்’ என உம்மை விரிக்க. ‘நிறைந்தது’ என்பதில் அகரம் தொகுத்தல். அமர் நீதி நாயனார் நாட்டிய துலாக்கோல் மண்ணுலகத்ததாயினும் இறைவனது கோவணத்தைத் தாங்கிய தட்டு,