பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை642

அடி-1: மேவிய - உடம்புமுழுதும் பொருந்திய. புன் மயிர் - குறு உரோமங்கள். பாவிய - பரந்த, பொதிந்த - மூடிய புண் - சீயும், சினையும். கூறு - துண்டு. முடை - முடைநாற்றம். விழுது - நெகிழ்ச்சியுடையதிரள், வழும்பு - நிணம்; கொழுப்பு, நீர் - சிறுநீரும், வெயர்வையும். “மலம்” என்பது உடல் அழுக்கையும் குறிக்கும். ‘நரம்பாகிய கயிறு’ என்க. இன், வேண்டாவழிச் சாரியை. ‘ஏதினும்’ என்பது, ‘யாதினும்’என்பதன் மரூஉ. வரை - மேருமலை. தனி - ஒப்பற்ற. புரம், திரிபுரம், கண் படையாக - கண்ணையே படைக்கலமாகக் கொண்டு. பொடி - சாம்பல். வீயா - இறவாத. ‘அமரர்’என்பது ‘மரித்தல் இல்லாதவர்’ என்னும் பொருளது ஆதலின் இங்கு அது வாளா பெயராய் வந்தது. அமுது - உண்ணும் உணவு. ‘உண்டதனால் ஊறு எதுவும் நிகழ்ந்திலது’ என்றற்கு ‘உணவாக்கி’ என்றார். வெருவா - அச்சங் கொள்ள. சரளம் - தேவ தாரு. வகுளம் - மகிழ். முகிழ்த்த - தோற்றுவித்த. புது வெயில் - அதிசய வெயில். இருடி கணங்கட்கு ஆன புண்ணியம் தவம். ‘புரக்கும் பெருமான்’ என்க. இனி, புரக்கும் இடைமருது’ என்றலும் ஆம். தெய்வத் திருவருள் - தெய்வத் தன்மையைத் தரும் திருவருள். உரிமையாக்கிக் கொள்ளுதலை, ‘கைக்கொள்ளுதல்’ என்றும் ‘கைப்பற்றுதல்’என்றும் கூறும் வழக்கம் பற்றி, “கைவந்து” என்றார்.‘கையின்கண் வந்து’ என உருபு விரிக்க. படலம் - மறைப்பு. ‘பசுக்களும், பாசங் களும் பதியின்கண் வியாப்பியமேயாகலின், வியாபமாகிய பதியை உணரவே, அதன்கண் வியாப்பியமாகிய பசுக்களும், பாசங் களும் தாமாகவே உணரப்படும்’ என்க. அது கடலுள் மூழ்கி அதன் ஆழத்தைக் காண்பவர் அதனானே அக்கடலின்கண் உள்ள பொருள்களையும் நன்குணர்தலில் வைத்து உணர்ந்துகொள்க. கடல் ஆழத்தைக் காண முயலாமல் கடலில் உள்ள பொருள்களை மட்டும் காண முயல்வோர் அவற்றுட் சிலவற்றைமட்டுமே பெற்றொழிதலன்றி அனைத்தையும் பெறாமைப்போலப் பதியை உணர முயலாமல் பசுபாசங்களை மட்டும் உணர்வோர் அவற்றது இயல்பினை ஒருபுடையாக உணர்தலன்றி முற்றஉணராமை பற்றி,

நின்னைக் காணா மாந்தர்
தம்மையுங் காணாத் தன்மை யோரே

என்றார் ‘தன்னையும்’ என்பது பாடம் ஆகாமையை, மாதவச் சிவஞான யோகிகள் சிவஞான போத மாபாடியத்துள் இதனை எடுத்துக்காட்டிய இடத்தில்1காணும் பாடம் பற்றி யறிக. முதற்கண் போந்த ஓகாரங்கள் தெரிநிலைப் பொருள.


1 சூ - 6- பிண்டப் பொழிப்பு விளக்கம்.