வெண்பா | 875. | ஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ எண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுவாம் என்னுமது நாம். | | 14 |
கட்டளைக் கலித்துறை | 876. | நாமே இடையுள்ள வாறறி வாமினி நாங்கள்சொல்லல் ஆமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப் பூமேல் அணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே. | | 15 |
875. குறிப்புரை: “ஓராது”முதலிய நான்கும் எதிர்மறை வினையெச்சங்கள். அவைகளில் உள்ள ஏகாரங்கள் பிரிநிலைப் பொருள. ஓர்தல், இங்கு அறிதல். அதற்கு ‘நூற்பொருளை’ என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நேர்தல் - சாத்த உடன்படுதல். ஏந்தத் திருமுழுக்கும் நீரால் நிரம்புதல் பற்றி,“நீரும் நிரப்பாதே” என்றார். யார் ஆயோ - என்ன இயைபு உடையேமாகியோ,’நண்ணுவாம் என்னும் அது யார் ஆயோ’ என்க. செயற்பாலனவற்றுள் ஒன்றையும் செய்யாமலே,‘நண்ணுவாம்’ எனக் கூறுதற்கு யாதோர் இயையும் இல்லை - என்றபடி. “அது” என்பது, என்று சொல்லுதலாகிய அத்தொழிலையே குறித்து நிற்றலால் அஃது, “யாராய்” என்னும் வினையெச்சத்தோடு முடிந்தது. 876. குறிப்புரை: இப்பாட்டு அகத்திணைப் பொருளில் ‘மெய் தொட்டுப் பயிறல்’என்னும் துறை பற்றித் தலைவன் கூற்றாய் அமைந்தது. மருத வனத்து அன்னம் அன்னவர் தலைவி. மேல் - தலைமேல். அணிந்து - அலங்கரித்து. ‘மேல் பூவால் அணிந்து’என்க. பிழைக்கச் செய்தார் - அணிந்தவர்கள் தம்செயல் குற்றமாகும்படி செய்தார்கள். ‘அன்னம் அன்னவரது இடை எவ்வாறு உள்ளது’ என்பதை (அது பூவைச் சுமக்காதுஎன்பதை) நாம் மட்டுமே அறிவோம். (அவர்கள் அறியார்கள்)இனி நாங்கள் அவர்களுக்குச் சொல்லலாமோ! (கூடாது)பூவை அணிந்ததற்குமேல் நெற்றியில் ஒரு பொட்டும் முன்பே மெலிகின்றவர்மேல் மேலும் சுமையை ஏற்றல் தக்கதன்று. (தலைவன் இவ்வாறு கூறி, ‘இதற்கு மேல்தலையில் உள்ள மலர்களை நாடி வண்டுகள் வருகின்றனவே’எனக் கூறி, அவைகளை ஓட்டுவான்போலத் தலைவியை நெருங்கி அவளது மெய்யைத் தீண்டுவான்.)
|