பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை662

தொடியா யிரங்கொண்ட தோளிரண் டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.

27

அகவற்பா

889.கொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்
செவ்வான் உருவிற் பையர வார்த்துச்
சிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை
மூவா முதல்வ முக்கட் செல்வ
5தேவ தேவ திருவிடை மருத

முடி ஆயிரம், கண்கள் மூவாயிரம், தோள் (வலம் ஆயிரம், இடம் ஆயிரம் ஆக) இரண்டாயிரம் - என்று இராப் பகல் படியாய்' என இயைத்துரைக்க. படித்தல் - சொல்லுதல்; 'இங்ஙனம் சொல்லின், அதுதோத்திரமாகிப் பயன் தரும்' என்பது கருத்து. 'ஆயிரம்' என்பது பன்மை குறித்து நின்றதாகலின் "தோள் இரண்டாயிரம்" என்றது இழுக்கிற்றில்லை அப்பர் பெருமானும் பின்பு,

ஆயிர ஞாயிறு போலும்
ஆயிரம் நீண்முடி யானும்

எனக் கூறுகின்றவர் அதற்கு முன்னே,

ஆயிரம் பொன்வரைபோலும்
ஆயிரந் தோளுடை யானும்1

என அருளிச் செய்தமை காண்க.

'நீறு அணிந்த தோள், தொடி கொண்ட தோள்' எனத்தனித் தனி இயைக்க. தொடி - வீர வளை. இதனை,

வலம்படு வாய்வாள் ஏந்திஒன்னார்
களம் படக் கடந்த கழல்தொடிக் தடக்கை2

என்பதனால் அறிக.

889. குறிப்புரை: 'கண்டத்திலும், தோளிலும் உருவிலும் அரவு ஆர்த்து' ஆர்த்து - ஆர்க்க (கட்ட)ப்பட்டு. இவ் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. நெறி தரல் - நெறிப்புக்காட்டுதல். மூவா - அழியாத பூசத் தீர்த்தம் - தைப்பூச நாளில் மூழ்கும் தீர்த்தம். இஃது இத்தலத்தின் சிறப்பு.


1. திருமுறை - 4.4.8.
2. புறநானூறு - 91.