பக்கம் எண் :

67அற்புதத் திருவந்தாதி

மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா(து) அரங்கு. 

77

 

121.

அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும்! ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்!தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து. 

78


சொல் முகடு - அண்டத்தின் உச்சி. அது பேர்தலாவது, உடைதல். “மறிந்து” என்பதை, ‘மறிய’ எனத் திரிக்க. மறிதல் - உழலுதல். வான், இங்குச் சேய்மை. ‘ஆகலான் அரங்கு ஆற்றாது; அதனை யறிந்து மெல்ல ஆடுமின்’ என்பதாம். ஆடும், முன்னிலைப் பன்மை ஏவல். சிவபெருமான் விசுவ ரூபத்தினைச் சிறப்பித்தவாறு.

121. அ. சொ. பொ.: ‘ஏழாய், ஆடுவான் எவ்வுயிர்க்கும் வாளா இரங்குமோ! பன்னாள் பணிந்து இரந்தால் (இரங்கும்). இரங்குமேல். தான், என்னாகவையான்; எவ்வுலகம் ஈந்து அளியான்!’ என இயைத்துக் கொள்க. ‘அரங்கமாப் பேய்க் காட்டில் ஆடுவான்” என்றாரேனும், ‘பேய்க் காடு அரங்கமா அதன்கண் ஆடுவான்’ என்றல் கருத்து என்க. எவ்வுயிர்க்கும் - எத்துணைச் சிறப்புடைய உயிர்க்கும். அவை அயன், மால், ஏனைத் தேவர் முதலியோர். ‘அவரெல்லாம் அவனைப் பன்னாள் பணிந்து இரந்தே தத்தம் பதவிகளைப் பெற்றனர் என்றபடி. எனவே, ‘அவனைப் பன்னாள் பணிந்து இரந்தால் திருவுளம் இரங்குவான்’ என்பதற்கும், ‘இரங்கினால் எத்தகைய சிறப்பைத்தான் அவன் தரமாட்டான்’ என்பதற்கும் அவ் அயன், மால் முதலியோரே சான்று’ என்றவாறு. ஏழாய் - அறிவிலியே. இது தமது நெஞ்சத்தை விளித்தது. “இரங்குமோ” என்னும் ஓகாரம் எதிர்மறை. “இரங்குமேல்” என்ற அனுவாதத் தால், இரங்குதலும் பெறப்பட்டது. அளித்தல் - காத்தல். ‘எத்தகைய சிறப்பையும் எய்தச் செய்வான். எந்த உலகத்தையும் ஈந்து அளிப்பான்’ எனக் கூறற்பாலதனை இங்ஙனம் வினாவாகக் கூறினார், வலியுறுத்தித் தெளிவித்தற்கு ‘சிவன் வாளா இரங்கான்; பன்னாள் பணிந்து இரந்தால் இரங்குவான்’ என்பது உணர்த்தியவாறு.

சும்மா கிடைக்குமோ, சோணாசலன்பாதம்!
அம்மால் விரிஞ்சன் அறிகிலார்; - நம்மால்
இருந்துகதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது!1

எனப் பிற்காலத்தவரும் கூறினார்.


1. குகை நமசிவாயர் - அருணகிரி யந்தாதி.