பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை670

பட்டினத்து அடிகள்
அருளிச் செய்த

29. திருஏகம்பமுடையார் திருவந்தாதி

கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

892.மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோ?கச்சி ஏகம்பனே.

1


892. குறிப்புரை: மெய்த் தொண்டர், பயன் கருதாது பணி செய்பவர். அவர் செல்லும் நெறி, "தன்கடன் அடியேனையும் தாங்குதல்;- என்கடன் பணி செய்து கிடப்பதே"-1 எனக் கொண்டு ஒழுகுதல், 'மனத் தொண்டு, வாய்த் தொண்டு, கைத்தொண்டு ஆதலின் அது செய்பவரை, "மிக நற்பணி செய் கைத்தொண்டர் என்றும் 'பயன் கருதியாவது அவருடன் கூடி அப்பணியைச் செய்திலேன்' என்பார், "கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டு உவந்திலேன்" என்றும் கூறினார். உவத்தல் - மகிழ்தல், அது மகிழ்ச்சியோடு செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. உண்பதற்கு - பயன் கொள்ளுதற் பொருட்டு. பயன் கொள்ளுதற் பொருட்டுத் திருத்தொண்டினை உயர்த்துப் பேசுதலால், அதனைப் பொய்த் தொண்டு பேசுதலாகக் கூறினார். மனத்தின்கண் உள்ள பொய்ம்மை அதன் வழிச் செய்யப்படும் தொண்டினையும் சார்வதாகும். "புறம் புறம்" என்னும் அடுக்குப் பன்மைப் பொருட்டாய், 'எப்பொழுதும்' எனப் பொருள் தந்தது. புறமே போற்றுதலாவது மெய்த் தொண்டிற்கு ஏதுவான மெய்யன்பு உள்ளத்தில் இன்றிப் பொதுவான அன்பினால் போற்றுதல். 'இவ்வாறு உன்னைப் போற்றினும் யானும் உன் அடியவருள் ஒருவனே' என்பார் தம்மை, "இத்தொண்டனேன்" என்றும், 'மெய்த்தொண்டர் செய்யும் பணியையன்றி, என்போன்ற தொண்டர் செய்யும் பணியை நீ விரும்புவாயோ' என்பார், "இத்தொண்டனேன் பணி கொள்ளுதியே" என்றும் கூறினார். "கச்சி ஏகம்பனே" என்பதை முதலிற் கொள்க.


1. திருமுறை - 5.19.9.