897. | அடிநின்ற சூழல் அகோசரம் மாலுக்(கு) அயற்(கு) அலரின் முடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின் இடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாமெங்ஙனே வடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. | | 6 |
898. | வணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின் குணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடினல்லால் கணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. | | 7 |
அது செய்த பிழையைப் பொறுத்து அதற்கு அருள்செய்தது. அது செய்த பிழையாவது, திருமாலின் ஊர்தியாகிய கருடனது செருக்கை இறைவன் ஆணையின்றித் தானே ஒறுத்து அடக்க முயன்றது. இவ்வரலாற்றைக் காஞ்சிப் புராணத் தழுவக் குழைந்த படலத்திற் காண்க. இங்ஙனம் இறைவன் அருள் செய்யும்படி இடபம் வழிபட்ட ஓர் இலிங்கம் திருவேகம்பத் திருக்கோயில் தீர்த்தக் கரையில் இருத்தல் காணலாம். சுற்று - சுற்றிக் கட்டுதல். ஏர் - அழகு. 'நின் துணையடியே என்றும் அற்சனை செய்யப் பெற்று உகந்தேன்' என் கருத்து இனிதாக நின்பெருகுசீர் கற்று உகந்தேன் என இயைத்துக் கொள்க. 'இனி எனக்கு என்ன குறை' என்பது குறிப்பெச்சம். உகந்தேன் - மேலும் மேலும் விரும்பினேன், சீர் - புகழ். 897. குறிப்புரை: "கார்முகிலின்.... ஏகம்ப" என்பதை முதலிலும், "மாலுக்கு" என்பதை அதன் பின்னும், "எங்ஙனே" என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. சூழல் - இடம். அகோசரம் - அகப்படாதது. "ஆயிற்று" என்பதை அகோசரத் திற்கும் கூட்டுக. "சூழ்முடி" என்பதை, 'முடிசூழ்' எனமாற்றி 'முடியும் இடம்' என உரைக்க. வடி - கூர்மை. 'மாற்கும், அயற்குமே நின் வடிவம் காண்பரிதாய பொழுது யாங்கள் உன் வடிவத்தைக் கண்டு வணங்குவது எங்ஙன்' என்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனம் கூறினாராயினும், 'மாலும், அயனும் அகங்காரத்தால் அளந்து காணப் புக்கார் ஆதலின் அவர்க்கு அரிதாயிற்று, யாம் அவ்வாறின்றி அன்பினால் வணங்க வருகின்றேம் ஆதலின் எமக்கு நின் வடிவம் எளிதே' என்பது இதன் குறிப்புப் பொருளாம். இல்லையேல், 'வணங்குதல் இயலாது' என்றே கூறியதாய்விடும். 898. குறிப்புரை: '(எம்) தலை வணக்கம் நின் திருவடிக்கே செய்யும்; (யாம்) மையல் கொண்டோர் இணக்கன்றி மற்றோர் இணக்கறிவோமல்லம்; (எம்) கவி நலம், வல் அரவின் குணக் குன்ற வில்லியாகிய நின் குளிர் கச்சி ஏகம்பம் பாடின் அல்லால் மற்றொரு தேவரைப் பாடும் கணக்கு அன்று' என இயைத்து உரைத்துக்கொள்க.
|