பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை674

901.தன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்
வண்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக் கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே.

10

902.தனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம்மடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு வினாவியொர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே.

11


"என்கள்" எனவந்தது. 'எவைகள்' என்பது இதன் பொருள். 'கொண்ட எவைகள் என்றாலும்' என்றது, 'அவன் கொண்ட கோலங்களை எந்த எந்தப் பொருட்கு ஒப்பாகக் கூறியபோதிலும்' என்றவாறு. 'உண்மை, - உலகம் முழுவதிலும் நிலைபெற்றுள்ள தன்மைகள் எல்லாம் தன்கள்' - (அவனுடைய தன்மைகளே) - என்பதாம். 'தன்னகள்' என்பதில் அகரம் தொகுக்கப்பட்டது. தன்ன - தன்னுடையன.

901. குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருள் ஐந்திணைப் பாங்கற் கூட்டத்தில் தலைவன் பாங்கன் கழற்றெதிர் மறுத்தல் துறையது.

'தவத்தோரும், இமையவரும் ஏகம்பர்' என்க. தாம், அசை, வன்மையிற் குன்றாமை மதிலுக்கு அடை. "ஏகம்பரது வண் கயிலைப் பொன்" என்றது தலைவியை. பொன் - திருமகள் போல்வாள். 'பொன்னினது சாயல் முதலியன காதல் நோயை விளைவித்தன' என்றான். மயிற் சாயல் - மயிலினிது சாயல் போலும் சாயல், சேயரி - செவ்வரிகள். புரி - புரிந்த குழல் - கூந்தல், 'மென்மையின்' என்பது எதுகை நோக்கி, 'மென்மயின்' எனப் போலியாய் வந்தது. சாய்தல் - மெலிதல். மருங்குல் - இடை.

902. குறிப்புரை: இதுவும் அகப் பொருள் துறையதே. துறை, பாங்கியிற் கூட்டத்தில் தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்.

'கயிலையில் வந்து வினாவி' என்க. 'களிறு வினாவலாவது, அம்பு தைக்கப்பட்ட களிறு ஒன்று இவ்வழி யாகப் போகக் கண்டீரோ' என வினாவுதல். இது தலைவன் தோழியோடு பேசத் தொடங்குதற்கு ஒரு வழியாகும். தொடர்ந்து நிகழ்த்தும் பேச்சினிடையே கண்ட தலைவனது குறிப்பையே தோழி தலைவியிடம் "புனம் விட்டு அகலார்" எனக் குறித்தாள். 'அவர்க்கு நான் என்ன சொல்வது' என்பது குறிப்பெச்சம். சேய் - முருகன். ஆம் பொழுதும் - "சேயனையார்" என்பது 'தலைவர்' என்னும் அளவாய்.