பக்கம் எண் :

681திருஏகம்பமுடையார் திருவந்தாதி

913.திரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து
பிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்னங்குப் பேசுமினே.

22

914.பேசுக யாவர் உமைக்கணி யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பர் பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே.

23


913. குறிப்புரை: திரி அப்புரம் - வானத் திரிகின்ற அந்த மதில்கள். 'கயிலைக் கிரியில் உள்ள அக்குறவர்' என்க. பருவம் - மூங்கில்கள் முதிர்ந்து முத்தினைச் சொரியும் காலம். இடு தரளம் - சேர்ந்து வைக்கின்ற முத்து. வினையோம் - முயற்சி யுடைய யாங்கள். (இவ்வாறு தோழி, தலைவி முதலானவர் களைத் தன்னோடு உளப்படுத்துக் கூறினாள்.) விரியச் சுருள் முதல் - பின் விரிதற் பொருட்டு முன்னே சுருண்டு இருக்கும் இலைகளை யுடைய இள மூங்கில், 'கயிலை சாரலில் உள்ளோர் முற்றிய மூங்கிலினின்றும் பெறுகின்றறோம்' எனத் தலைவன் தலைவியை வரைதற்கு முலைவிலையாகத் தருவதாகக் கூறிய முத்துத் திரளைத் தோழி, 'அஃது எங்கட்கு அரியது ஒன்றன்று' என இகழ்ந்து கூறினார். இவ்வாறு தோழி இகழ்ந்து கூறியதன் கருத்து, 'எம் தமர்க்கு உனது (தலைவனது) குல நலம், கல்வி, பண்பு முதலியவைகளை அறிவிப்பின் அவை காரணமாக அவர் வரைவுடம்படுத்தலல்லது, விலைக்குக் கொடுப்பதாயின் இவட்கு ஏழ் பொழிலைக் கொடுப்பினும் நிரம்பாது ஆகலின் உடன்படார்' எனக் கூறுதலாம்.1 "விரைவிரைந்து" இரட்டைக் கிளவி. நீர் பிரிய அங்குக் கதிர் முத்தின் பெற்றது என் - வரைபொருட் பிரிதலாக நீர் பிரிதற்கு அங்கு (நும் இடத்தில் - கயிலை மலைச் சாரலில்)ப் பெறும் முத்தினால் அடையத் தக்க பயன் யாது? 'பெறுவது' எனற்பாலது, "பெற்றது" என இறந்த காலமாக ஓதப்பட்டது. இது தலைவன் வரைபொருட் பிரிதலில் தோழி தலைவற்கு தலைவியது முலைவிலை பற்றிக் கூறியது. 'முத்துக்கள் எமக்கு அரியவல்ல' என்றற்குத் தோழி முத்தினை இளமூங்கிலே தங்கட்குத் தருவதாகக் கூறினாள். பிரிய - பிரிதலால். 'பிரிதலால் கிடைக்கும் முத்து' என ஒரு சொல் வருவிக்க.

914. குறிப்புரை: 'யாவர் பித்தர் (அவர்) உமை, - கணியார் - என்று பேசுக' என மாற்றி இறுதியிற் கூட்டி, அதன்பின், 'யாம் அவ்வாறு பேசோம்' என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. 'கணி'


1. திருக்கோவையார் - 266