| முயங்கு மணியறை காள்மொழி யீரொழி யாதுநெஞ்சம் மயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. | | 26 |
918. | வகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம் மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய் நெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர் தொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலையிச் சூழ்புனத்தே. | | 27 |
பெரிய. முயங்கும் - நாங்கள் தழுவும் இடமாகிய. மணி அறை - அழகிய பாறை. 'நெஞ்சும் ஒழியாது மயங்கும் பரிசாக' என ஆக்கம் வருவிக்க. பரிசு - தன்மை 'எம்நெஞ்சம்' என உரைக்க. பொன்னார் - பொன்போல்பவர்கள் பொன் - திருமகள். சூழல் - இடம். 'எமக்கு வகுத்து மொழியீர்' என இயைக்க. வகுத்து மொழிதல் - விவரமாகச் சொல்லுதல். இது வறும்புனம் கண்டு வருந்தும் தலைவன் கண்டவற்றொடு கவன்றுரைத்தது. ஆடுதலைப் பொழிலுக்கும் கூட்டுக. 'அவர் ஆடும் பொழில் ஆதலாலும், அவன் ஆடும் அருவி ஆதலாலும், யாம் முயங்கும் அறை ஆதலாலும் உம்பால் அவர்கள் சொல்லியே சென்றிருப்பர்' என்பது குறிப்பு. 918. குறிப்புரை: இது, தோழி, 'இனிக் களவொழுக்கம் வெளிப்பட்டுத் தீமை பயக்கும்' எனக் கூறி வரைவு கடாவத் தலைவன் மேலும் களவை நீட்டிப்பான் வேண்டி வரைவுடன்படாது மறுத்தது. "கள்வாய்" என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. நெருப்பு - நெகிழ்வு, அது மலர் மலருங் காலத்தைக் குறித்தது. ஆல் உருபைக் கண்ணுரு பாகத் திரித்துக் கொள்க. 'அருவிகள் தம்பால் மலர்களை வேண்டி நின்றார்க்கு மணிகளைச் சிந்தும் கயிலை' எனவும், 'கம்பர் கயிலை' எனவும் தனித்தனி இயைக்க. 'கயிலையில் இப்புனத்தில்' என உரைக்க. 'ஆர் உயிர் ஒன்றாம் இருவரை (அஃது அறியாது) விள்ள - இருவராகிப் பிரிய வைத்து மணத்துக்கு நாள் வகுப்பவரும், மணத்தோடு கூட்டியே இன்பத்தை மிகுப்பவரும் இவரே போலும்' என இயைத்துக் கொள்க. 'உடலால் இருவர் போலத் தோன்றினும் உயிர் ஒன்றேயாய் உள்ளர்க்கு மணம் என்ன வேண்டுகின்றது? எனத் தலைவன் தங்கள் களவொழுக் கத்தின் சிறப்பைப் புலப்படுத்தி வரைவுடன்படாது மறுத்தான். 'இவரே போலும்' என்பது "இவர்போல்" எனத் தொகுத்தல் பெற்றது. 'இவர்' என்றது தோழி வழியாக ஆயத்தாரை. 'அருவிகள் மலர் வேண்டினார்க்கு மணி சிந்தும் கயிலை' என்றதனால், 'மணம் வழியாக அன்பைப் பெற வேண்டி னார்க்கு, பிறப்பிலே உண்டான அன்பைத் தருவது யாம் வாழிடம்' எனத் தலைவன் இறைச்சிப் பொருள் கூறினான். அங்ஙனம் கூறுதல் தலைவர்க்கும் உரித்தாகலின்.
|