பக்கம் எண் :

685திருஏகம்பமுடையார் திருவந்தாதி

919.புனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்கனி பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே.

28

920.உள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரியக்கொண் டார்தம் அடியவர் சார்வதன்றே.

29


919. குறிப்புரை: "மனங் குழையா" என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. மனம் குழையா - மனம் கசிந்து. அன்பு நீர் சிந்துதல் பற்றிக் கண்களை "அருங் கண்" என்றார். கண் கனி தலாவது, நீரைச் சொரிதல். கண் கனி பண் - கண்கள் கனிதற்கு ஏதுவான இசைகள். முன்னர் மனம் குழைதல் கூறப்பட்டமையால், "குழையாத் தொழும்" என்றது, உடல் குழைந்து தொழுதலை. 'ஏகம்பரது இக்கயிலாயம்' என்க. 'புனம் குழையாது' என்று தினை கொய்த - 'புனம் இதற்குமேல் பசுமை பெற்றுத் தழைக்க மாட்டாது' என்று அறிந்து தினைக் கதிர்களைக் குறவர்கள் கொய்தது. கனம் குழையாள் தன் பிரியவும் - கனமாகிய குழையை அணிந்த தலைவி புனத்தை விட்டுப் பிரிந்து இல்லத்தில் இருக்கச் செய்தற்கும் ஆம். (உம்மை மாற்றி யுரைக்கப்பட்டது.) குறவர் தம் இயல்பிலே தம் தொழிலைச்செய்தாராயினும் அதனால், நமக்குக் கையறவு உறும் - செயல் அறம் அளவில் துன்பம் உறாநின்றது. (இதனை அவர்கள் அறியமாட்டார்கள்) ஆல், அசை.

920. குறிப்புரை: ஈற்றடியின் பாடம் பிழைபட்டு, வேறாய்க் காணப்படுகின்றது. தள் அம்பு - வில்லினின்றும் எய்யப்படுகின்ற அம்பினை. விண் அரணம் எரியக் கொண்டார் - ஆகாயத்தில் உலாவிய கோட்டைகள் (திரிபுரங்கள்) எரிந்தழியும்படி கைக் கொண்டவர். 'சிறு மானுடர் உற்ற பொருட் செல்வம் அவரைப் போலும் சிறுமனத்தை உடையவர்கட்கு அடையப்படும் பற்றுக் கோவை தன்றித் திரிபுரத்தை எரித்தவராகிய சிவபெருமானுக்கு அடியவராயினரால் அடையப்படுவதன்று' என முடித்துக்கொள்க. "பொருட் செல்வம் பூரியார் கண்ணு முள"1 ஆதலின் அஃது ஒன்றையே விரும்பி, அருட் செல்வத்தை விரும்பாதாரைச் "சிறுமானுடர்" எனவும், "சிறுமனத்தார்" எனவும் கூறினார். கள்ளம், இரப்பார்க்கு, 'இல்லை' எனக் கூறிக் கரக்கும் கரவு. 'சிவனடியார்க்குப் பொருட் செல்வம் செல்வமாய்த் தோன்றாது'


1. திருக்குறள் - 241.